Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 28 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபாயக் கழிவுகளை அள்ளும் சுயபுத்தி இல்லாத சனக்கூட்டம்
எந்தவொரு தொழிற்றுறையைச் சேர்ந்தவர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அதன்தாக்கம் மூக்கை அரிக்காது. ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இரண்டு நாள்களுக்கு நேரம் சுணங்கிவிடின், அப்பகுதியே நாற்றமெடுக்கும். ஆனாலும், தூய்மைப் பணியாளர்கள், கழிவுகளை வகைப்பிரித்து அகற்றிச்செல்வர்.
ஒவ்வொரு தொழிலையும் செய்யும்போது, புத்திக்கூர்மை முக்கியமானது. ஆனால், பேராபத்தை விளைவிக்கக்கூடிய நஞ்சென அறிவுறுத்தியும், அபாயக் கழிவுகளை அள்ளிச்செல்லும் மக்களை, சுயபுத்தியில்லாத சனக்கூட்டமெனச் சொல்வதே சாலவும் பொருந்தும்.
நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன; வீடுகளை விட்டு முக்கிய கடமைகளுக்கு மட்டுமே வெளியேவர முடியும். பல நிறுவனங்கள், ‘வீட்டிலிருந்து வேலை’ எனும் முறைமையைப் பின்பற்றுகின்றன. அவை எல்லாமே, கொரோனா வைரஸ் தொற்றுவதைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளாகும்.
ஆனால், பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு, கொழும்புத் துறைமுகத்துக்கு வடமேல் திசையில் நங்கூரமிட்டுள்ள ‘எக்ஸ் - பிரஸ் பேர்ள்’ சரக்குக் கப்பலில் தீப்பிழம்பாய் கிளம்பி, கரும்புகையைக் கக்கி, எரிந்துகொண்டிருக்கிறது. இதனால், ஏனைய நான்கு பூதங்களான வானம், காற்று, நீர், நிலம் ஆகியவை கடுமையாக மாசாகி வருகின்றன.
தீப்பற்றி எரியும் அக்கப்பல், இரண்டாகப் பிளந்துள்ளது. அதிலிருந்து, கொள்கலன்களும், அபாயகரமான பொருள்களும் கழிவுகளும் கரையொதுங்குகின்றன. பொலித்தீன் தயாரிப்பதற்கான இரசாயனத் திரவியத்தை, ஏற்றிவந்த கப்பலே, தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அதிலிருந்து கரையொதுங்கும் பொருள்களைத் தொடவேண்டாமென, எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஆனால், பமுனுகம, துங்கால்பிட்டிய, கொச்சிக்கடை, நீர்கொழும்பு போன்ற பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரையோரங்களைச் சேர்ந்தவர்கள், கரையோரங்களில் மொய்த்து, பொருள்களை அள்ளிச்செல்கின்றனர். அவர்களில் சிலருக்கு, தோல் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில், அரசாங்கத்தின் கட்டளையை மீறுகின்ற மக்கள், கொரோனாவின் தொற்றுக்கு அப்பால்சென்று, ‘ஒவ்வாமைத் தொற்றை’ ஒட்டிக்கொண்டுள்ளனர். இது, எவ்வாறான வகைகளில் உருமாறி, விஷ்வரூபமெடுத்து ஆடப்போகிறது என்பதற்கு, காலமே பதில்சொல்லும்.
அள்ளிக்குவித்த பொருள்களில், இரசாயனம் இருந்துள்ளமை, கொட்டிக்கிடந்தவற்றை பார்க்கும் போது புலனாகிறது. இன்னும் சில, பொதிகளில் இனிப்புப் பண்டங்களும், வாசனைத்திரவியங்களும் இருந்துள்ளன.
வீதியோரங்களிலும், பொதுப் போக்குவரத்துகளிலும் கூவிக்கூவி விற்போரில் பலர், சட்டவிரோதமான பொருள்களை, குறைந்த விலைக்கு விற்பது ஒன்றும் இரகசியமல்ல: ஆகையால், பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும்போது, அவையெல்லாம் சந்தைக்கு வந்தே தீரும். நுகர்வோர்தான் விழிப்பாக இருக்கவேண்டும்.
ஐம்பூதங்களும் மாசுற்று இருப்பதால், என்னென்ன தொற்றுநோய்கள் தொற்றிக்கொள்ளும் என்பதை எல்லாம் யூகிக்கவே முடியாது. ஆனால், அபாயக் கழிவுகளை அள்ளும், சுயபுத்தியில்லாத சனக்கூட்டம் இருக்கும் வரையிலும், அவற்றையெல்லாம் அனுபவித்தே ஆகவேண்டும். அதில், மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. (28.05.2021)
4 minute ago
8 minute ago
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
12 minute ago
1 hours ago