Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மே 05 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மீதான உள, உடலியல் ரீதியான துன்புறுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிய மாணவர்கள் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான துன்புறுத்தலுக்கு பொறுப்பானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், வழங்கப்படும் தண்டனைகள் எதிர்கால மாணவ சமூகத்துக்கும் ஆசிரியர் குழாத்துக்கும் தக்க பாடமாக அமையவேண்டும்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனை, நிர்வாணப்படுத்தி பகடிவதைக்கு உட்படுத்தியமையால், அந்த மாணவன் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பெற்றோரின் கடுமையான உழைப்பு, கஷ்டங்களுக்கு மத்தியில் கற்று முன்னேற வேண்டும் என்ற பெரிய கனவுடன் பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் மாணவர்கள், பகிடிக்கு பயந்து இடைநடுவிலேயே கல்வியைக் கைவிட்டு விடுகின்றனர். இல்லையேல் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி, தப்பான முடிவை எடுத்து விடுகின்றனர்.
பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் மாணவர்களுக்கு அறிமுக விழாவைச் செய்தால் போதுமானது. அவர்களை மன உளைச்சலுக்கும், உடலியல் ரீதியாகத் தண்டிக்கவும் எவருக்கும் உரிமையில்லை என்பதை, ஆரம்பத்தில் இருந்தே கற்பிக்கவேண்டும்.
இதற்கிடையே கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் தரம் 11இல் கல்விப் பயிலும் மாணவியொருவர், உயரமான மாடியில் இருந்து கீழே விழுந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தான் பயின்ற பாடசாலையில், கணிதப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர் அந்த மாணவியை பாலியல் ரீதியில் சீண்டியுள்ளார்.அதற்கெதிராக பாடசாலை நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும், அந்த மாணவிக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனையடுத்து.
அம்மாணவி விடுகை பத்திரத்தைப் பெற்று வேறொரு பாடசாலையில் சேர்ந்துள்ளார்.ஏற்கெனவே பாலியல் ரீதியில் சீண்டிய கணிதப்பாட ஆசிரியரின், நண்பரொருவர், மாணவி புதிதாகச் சேர்ந்த பாடசாலையில் கற்பிக்கின்றார்.
இவர், அந்த மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என திட்டித்தீர்த்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்தே, கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி, தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இதற்கு பாடசாலை சமூகமும் முழுமையான பொறுப்பே ஏற்கவேண்டும். குற்றஞ்சாட்டப்பட்ட கணித பாட ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மாணவியை அநியாயமாக இழந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.
மாறாக, குற்றஞ்சாட்டிய மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில், பாடசாலை சமூகமும் ஒரு சில ஆசிரியர்களும் நடந்துகொண்ட விதம் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும்.
ஆகையால், எதிர்காலத்திலாவது இவ்வாறான வன்மங்களைக் கக்குவோரிடம் இருந்து மிகக்கவனமாக தங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பெற்றோருடையது.
அதேபோல, குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்தி, சமூகத்துக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கும் வகையில், தண்டனையைப் பெற்றுக்கொடுக்கவேண்டியது அதிகாரமிக்கவர்களின் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
05/05/2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago