2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை அவசரப்படுத்தவும்

R.Tharaniya   / 2025 ஜூன் 08 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில், தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல், மீன் வளத்தை அள்ளிச் செல்வது, வடக்கு மீனவர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். தற்போது, கிழக்கு மீனவர்கள் மீதான அட்டூழியங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்பது அண்மையில் நடைபெற்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது புரிகிறது.

வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளிட்ட நாட்டின் பல திசைகளிலும் கடற்படையினர் பாதுகாப்பு கடமைகளிலும் ரோந்து சேவைகளிலும் ஈடுபட்டுள்ளனர். தென்னிலங்கையை பொறுத்தவரையில், போதைப்பொருள் கடத்தப்படும் போது மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

வடக்கில், கடல் எல்லையை அத்துமீறும் தென்னிந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அத்துடன், கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கடத்துவோரும் கைது செய்யப்படுகின்றனர்.

எனினும், சுருக்கு வலையை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டார் என குற்றஞ்சாட்டப்பட்ட மீனவர் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள சம்பவம் கிழக்கில் இடம்பெற்றுள்ளது. 

திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் மீது கடற்படையினர், செவ்வாய்க்கிழமை (03)  அன்று மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  குச்சவெளி ஜாஜா நகர் பிரதேசத்தில் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான அய்யூப் கான் ஜனூஸ் என்ற இளைஞனே  காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில்  முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், திருகோணமலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், விசாரணை அறிக்கை கிடைத்ததன் பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில், திருகோணமலை, திருக்கடலூர் மீனவர் வாழைச்சேனை மீனவர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து,தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை, புல்மோட்டையில் மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை (05) ஈடுபட்டிருந்தனர். 

 மீன்களின் விலைகள் எகிறியுள்ளன. சந்தைக்கு மீன்களுக்கான பற்றாக்குறை, மோசமான காலநிலை காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்களாயின் அவர்களின் குடும்பங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்.

அத்துடன், சந்தைகளில் மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். மீன்களின் விலைகள் இன்னும் இன்னும் அதிகரிக்கும்.மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கு கடற்படையினருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை.

இந்நிலையில், புல்மோட்டையில் மீனவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, உரிய தண்டனை வழங்க வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்ட மீனவருக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, தடை செய்யப்பட்ட வலைகள், படகு இயந்திரங்களைச் சந்தைகளில் இருந்து அகற்ற வேண்டும். கைப்பற்றப்படும் சட்டவிரோதமான பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அழிக்கப்படவேண்டும். அதனூடாகவே மீனவர்களின் இவ்விரு பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும். 

06.06.2024


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X