2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வ​ரத்தை அபகரிக்க முயலும் பூதங்கள்

Editorial   / 2021 ஜனவரி 26 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாவது போட்டி பரீட்சையான உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தி, தடைகள் பலவற்றை தாண்டினாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான மாணவர்களுக்கே பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு வரம் கிடைக்கும். அவ்வாறு செல்லும் புதுமுக மாணவர்கள் மீது ‘ராகிங்’ எனும் பெயரில் வழங்கப்படும் “சித்திரவதையை” முற்றாக துடைத்தெறிய வேண்டும்.

பகிடிவதையால் மாணவர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். இடைவிலகுவோர், மனநிலை பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும், இது அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் பயில இருப்போரின் விருப்பம், பல்கலைக்கழகம் செல்லும் எண்ணம் ஆகியவற்றில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவிடும்

கூச்சப் பண்பு கொண்ட புதுமுக மாணவர்களிடமிருக்கும் ஒதுங்கிச் செல்லும் பண்பை இல்லாதொழித்தலே, மேலை நாடுகளில் பகிடிவதையாகும். ஆனால், இங்கு எல்லாமே தலைகீழாவே நடக்கியது.  புதியவர்களை பழையவர்கள் சித்திரைவதை செய்தல், பாலியல் கொடுமை விளைவித்தல்; மானசீகப் பாதிப்பை ஏற்படுத்தலே பகிடியெனும் பெயரில் வதைகளாக இங்கு முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேல் சென்று, இணையவழி ஊடாக பகிடிவதை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிர்வாணப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தி, நேரலையில் பாலியல் செயற்பாடுகளை வலியுறுத்திய நால்வரை இனங்கண்ட, யாழ். பல்கலைக்கழகம் அவர்களை இடைநிறுத்தியுள்ளது இது, நல்லதொரு முடிவு.

கொரோனா வைரஸ் தொற்றுடன் கல்விநடவடிக்கைகள் இணையவழிமூலம் முன்னெடுக்கப்பட்டது. பகிடிவதைகளும் இணையவழிக்கு சென்றுள்ளமை கவலைக்குரியது. இணையத்தின் ஊடான கல்விச்செயற்பாடுகளை எவ்வாறு மேம்படுத்தலாமென சிந்திக்காது, அற்பசொற்ப விடயங்களுக்கு  பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

இணையவழி ஊடான பாலியல் தொந்தரவின் முதலாவது சம்பவமாக, யாழ்.பல்கலைக்கழக சம்பவம் இலங்கையில் பதியப்பட்டாலும் பாலியல் ​வன்கொடுமைகள் பல நடந்துள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயதான உரூபா இரத்தினசீலி, விடுதியின் இரண்டாம் மாடியிலிருந்து 1975இல், குதித்ததால் முடக்கு நோய்க்கு ஆளானார். அவருடைய பெண்குறியினுள் மெழுகுவர்த்தியைச் செலுத்த முயன்றதால், மாணவி அப்படிச் செய்ததாக தகவல்.

இலவச கல்வியில் பயிலும் மாணவர்கள், நாட்டின் எதிர்க்காலத்தில் கவனஞ் செலுத்தவேண்டும். கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பின்னர், என்ன நடக்குமென சிந்தித்தபோது, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. அதனூடாக கிடைக்கக்கூடிய பல நல்ல விடயங்கள் உள்ளன.

தீய சிந்தனையை கைவிட்டு, கல்வியைப்பெற்று நமக்குப் பின்னால் இருப்போருக்கு ஒரு முன்மாதிரியாக திகழவேண்டும். அத்துடன், பல்கலைக்கழகங்களில் ‘ராகிங் எதிர்ப்பு’ சிந்தனை உருவாகவேண்டும். அதனூடாக, பூதங்களாகப் பார்க்கப்படும் சிரேஷ்ட மாணவர்கள் தொடர்பிலான எண்ணத்தைக் களையமுடியும்.  (21.09.2020)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X