2024 மே 02, வியாழக்கிழமை

வயிற்றில் ஓங்கி அடித்துவிடாதீர்கள்

Editorial   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உழைக்கும் மக்களின் வயிற்றில் ஓங்கி அடித்துவிடாதீர்கள்

அரச ஊழியர்களைப் பொறுத்தமட்டில், இறுதிக் காலக்கட்டத்தில் ஓய்வூதியம் கை கொடுக்கும். ஓய்வூதியம் இல்லாத தனியார் துறைகளைச் சேர்ந்தவர்கள், சேமித்திருந்தால் இன்றேல் காப்புறுதி அல்லது நிலையான வைப்புகளைச் செய்திருந்தால், நிதி நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்திருப்பார்களாயின் பிற்காலத்தில் யாரையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலே குறிப்பிட்ட எந்தவொரு முதலீடுகளையும் செய்யாதவர்கள், பெரிய சல்லி அல்லது சின்ன சல்லியை எதிர்பார்திருக்க வேண்டும். அதாவது, ஊழியர் சேமலாப நிதியை (ஊ.சே.நி) பெரிய சல்லியென்றும், ஊழியர் நம்பிக்கை நிதியை (ஊ.ந.நி) சின்னச் சல்லியென்றும் பெரும்பாலானவர்கள் சுருக்கமாக குறிப்பிட்டு, திட்டங்களை வகுத்துக்கொள்வர்.

இந்நிலையில்தான், உழைக்கும் மக்களின் தலையில் இடி விழுந்தாற் போல, வரி அறிவீடு தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இது, பொதுவெளியில் பேசு பொருளாக மாறிவிட்டது. அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களும் உழைக்கும் வர்க்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த, கூடுதல் வரி அறவீடு தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலை, தொழில் அமைச்சு வெளியிடவில்லை. நிதியமைச்சே நேரடியாக செய்துள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உழைக்கும் வர்க்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் களத்துக்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சென்றிருந்தமையும் கவனிக்கத்தக்கது.  

அதாவது, தேசிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்படும் நிதியத்தில், 25 சதவீதம் கூடுதல் வரியாக அறிவிடப்படவுள்ளது. இது, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகிய இரண்டில் இருந்தும் அறவிடப்படவுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட முன்மொழிவுகளின் பிரகாரமே இந்த கூடுதல் வரி அறவிடப்படவுள்ளது. இது, உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடாகும். இதனூடாக, மிஞ்சும் நிதியை, தேர்தலுக்காக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் கொள்ளையடிக்கிறது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கூடுதல் வரியை அறவிடுவதன் ஊடாக, தனியார் துறையினர் மற்றும் அரசாங்கத்தின் சட்டபூர்வ சபைகளில் கடமையாற்றும் பணியாளர்கள் தங்கள் பதவிக்காலத்தின் முடிவில் பெறும் பொருளாதார நன்மைகள் மீதான தாக்கத்தை செலுத்தும். இவ்விரு தரப்பினரும் தங்களுடைய இறுதிக் காலத்தை கழிப்பதற்கான ஒரேயொரு வழி, இதுவாகும்.  

இவற்றுக்கு மேலதிகமாக அரச வங்கிகளில் கடமையாற்றுவோருக்கு ஊழியர் நம்பிக்கை நிதியத்துக்கு மேலதிகமாக ஓய்வூதிய சம்பளமும் கிடைக்கின்றது. ஆதலால், அந்த துறையைச் சார்ந்தவர்களுக்கு, இந்த கூடுதல் வரி பெரும் தாக்கத்தை செலுத்தாது.

மாதாந்தம் சம்பளம் பெற்று, வரியையும் செலுத்தும் தனியார் துறைகளைச் சார்ந்த பணியாளர்களே, இந்த தீர்மானத்தினால் பெரிதும் பாதிக்கப்படவுள்ளனர். இதற்கு எதிராக, பல்வேறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி,  ஆளும் கட்சியின் பிரதான பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், கூடுதல் வரி அறவிடும் முறைமையை கடுமையாக எதிர்க்கிறது. (14.02.2022)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .