2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வழித்துணைக்கு விழித்துணையாகும் வெண் பிரம்பு

Editorial   / 2021 ஜனவரி 04 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழித்துணைக்கு விழித்துணையாகும் வெண் பிரம்பு

யாருக்கும் உதவி செய்யாவிடினும் பரவாயில்லை: உபத்திரமாவது செய்யாமல் இருக்கவேண்டுமென பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருக்கோம். இன்றைய காலசூழ்நிலையில், “உதவி” என்பதற்கப்பால் “ஒரு மீற்றர்” தூரமே பலருக்கும் நினைவுக்கு வருகிறது.

யாருடனும் உரசிவிடக் கூடாதென்பதற்காக, அன்றாட பயணங்களை பலரும் வெகு கச்சிதமாய் திட்டமிட்டுக்கொள்வர். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் அஞ்சுகின்றனர். சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள், குறுகிய தூரப் பயணங்களை நடந்தே செல்கின்றனர்.

ஆனால், தங்களை யாரும் உரசி, கீழே தள்ளிவிட்டுவிடக்கூடாது, தடக்கியும் விழுந்துவிடக்கூடாது, வழிதவறிவிடக்கூடாது என்பதற்காகவே, விழிப்புலனற்றவர்கள் வெள்ளைப்பிரம்புகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறானவர்கள் தங்களையும் பாதுகாத்து, மற்றவர்களுக்கும் சமிக்ஞை கொடுக்கின்றனர்.

ஒக்டோபர் 15ஆம் திகதி சர்வதேச வௌ்ளைப்பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எப்படி அனுஷ்டிக்கப்படுகிறது என்பதை வெள்ளைப்பிரம்பை ஏந்தியிருப்போரால் அவதானிக்க முடியாது. எனினும், அங்கசம்பூரணமாக இருப்போருக்கு, அத்தினம் ஓர் ​ஆலோசனையை வழங்குவதாய் அமையும்.

எமது நாட்டைப் பொறுத்தவரையில், வௌ்ளைப்பிரம்புடன் பிரதான வீதிகளுக்கு வருவோர், நிலைத்தடுமாறாது பயணிப்பதற்காக, நடைபாதைகளில், ……….. பதிக்கப்பட்டிருக்கும். அந்தத் தீர்க்கதர்சனமிக்கத் திட்டம் வரவேற்கத்தக்கது. அதற்கப்பால் வெவ்வேறு மதிப்பைக்கொண்ட நாணயத்தாள்களைக் கூட இலகுவாக இனங்கண்டு கொள்ளும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மனிதனும் அங்கசம்பூர்ணமாகவும் தேகாரோக்கியமாகவே வாழவிரும்புகின்றான். வாழ்க்கையோட்டத்தில் ஏற்படும் சில கவனயீனங்களால், தேகாரோக்கியத்தில் சிற்சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்துவிடுகின்றது. இதனால் சில அங்கங்களின் செயற்றிறன்களை  இழந்துவிடுகின்றான்.

திடீர் விபத்துகளின் ஊடாக அவயவயங்களை இழந்துவிட்டவர்கள், வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்காக பெரும்பாடுபடுவர். இதனிடையே எந்தக் காட்சியையும் காணாது, மனத்துக்குள் படத்தைக்கீறி, வாழ்ந்துகொண்டிருக்கும் வெள்ளைப்பிரம்புகளை ஏந்தியிருப்போருக்கு இடையூறின்​றியே ஏனையோரும் வாழவேண்டும்.

விழிப்புலனற்றவர்களின் வாழ்வில் வழிகாட்டும் ஒளிவிளக்காக வெண் பிரம்பு கருதப்படுகிறது. அவ்வாறானவர்களின் வழிநடைக்கான ஊன்றுகோலாகவும், உதவு சாதனமாகவும், அடையாளச் சின்னமாகவும் வெள்ளைப் பிரம்பு விளங்குகின்றது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அவயவயங்கள் அனைத்தும் இருந்தும் பலரும் கிரகிப்பதில் கோட்டையை விட்டுவிடுகின்றர். எனினும், எதனையுமே பார்க்கமுடியாத விழிப்புலனற்றவர்கள், எ​தோவொரு வகையில் அறிவை பெற்றுக்கொள்வதற்காக, பெய்லி எழுத்துகள் மூலமாக கல்விப்பயிலுகின்றனர். அவ்வாறானவர்கள், தேசியப்பரீட்சைகளில் பல திறமைகளை வெளிகாட்டியிருந்தமை வெளிப்படையாகும்.

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமானதையடுத்து, வௌ்ளைப்பிரம்புடன் வெளியில் திரிபவர்களை காணக்கிடைப்பது அரிதாகும். அவர்களுக்கான நேற்றைய நாள், பரந்தளவில் அனுஷ்டிக்கப்பட்டமைக்கு சான்றில்லை. அவர்களுடைய நாளையும் கொரோனா கொன்றுவிட்டது.

ஆனால், வௌ்ளைப்பிரம்பை போல, எஸ்லோன் ப​ட்டையில் தயாரிக்கப்பட்ட பிரம்பை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி வாழ்வோரும் இருக்கதான் செய்கின்றனர். “விழிப்புலனற்​றோர்”, “ஏமாற்றுப்பேர்வழிகள்” ​தொடர்பில், விழிகள் இருப்போரே விழிப்பாக இருக்கவேண்டுமென்பது எமது அவாவாகும். (16.10.2020)

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .