2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விடுமுறை வினோதங்கள் தலைக்கேறின் உலையை வைத்துவிடும்

A.Kanagaraj   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலவ வருடப் பிறப்பு கொண்டாட்டங்களுக்காக, சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தவர்கள் தலைநகர் உள்ளிட்ட பெருநகரங்களுக்குக் கடமையின் நிமித்தம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். நீண்டதொரு விடுமுறையுடன், புத்தாண்டு பிறந்தமையால், பலரும் குதூகலித்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் இம்முறை மூழ்கியிருந்தனர்.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டதன் பின்னர், பிறந்த பிலவ வருடம், மூன்றாவது அலையை உருவாக்கிவிடுமா, இல்லையா? என்பதற்கெல்லாம், அடுத்தடுத்த கட்டங்களே பதிலளிக்கும்.

பி.சி.ஆர் பரிசோதனைகள், எழுமாறான பரிசோதனைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை; ஆகையால், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, அச்சொட்டானதாக அமையவில்லையென்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

பொதுப் போக்குவரத்தில், சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயங்கியவர்கள், இரண்டொரு நாள்களுக்கு முன்னரோ, பிந்தியோ பயணத்தை ஆரம்பித்து முந்தி வந்துவிட்டனர். இன்னும் சிலர், விடுமுறைகளை மேலதிகமாக எடுத்துக்கொண்டு, நெரிசல் இல்லாத நேரத்தில், தூரப்பயணங்களை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

நீண்ட நாள்களுடன் வந்த கொண்டாட்ட விடுமுறை என்பதால், சுய கட்டுப்பாடுகள் தானாகவே தளர்த்தப்பட்டு, சுதந்திரப் பறவைகளாய் பலரும் பறக்கத்தொடங்கினர். அது பலருக்கு மகிழ்ச்சியாய் இருந்தாலும், சிலரது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கவனமின்மை காரணமாய், தங்களுடைய உறவுகளை இழந்து, சோகத்தில் மூழ்கவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. 

இன்னும் சிலர், எவ்விதமான அறிவுறுத்தல்களுக்கும் செவிசாய்க்காது போதையில் வாகனங்கள் செலுத்தி, தன்னுயிரை மாய்த்துக்கொண்டு, ஏனையவர்களின் உயிர்களுக்கும் உலையை வைத்துவிட்டிருக்கின்றனர். பலருக்கு அவையெல்லாம் விநோதங்களாகவே கண்களுக்குத் தெரியும். கவனமில்லாமலும் போதையிலும் இருக்கும் விநோதங்கள் உயிருக்கு உத்தரவாதத்தைத் தராது.

விடுமுறையைக் கழிப்பதற்காகத் தங்களுக்கு தெரியாத இடங்களுக்குச் செல்பவர்கள், அந்தந்த இடங்கள், அங்கு நிலவும் வானிலை தொடர்பில் அறிந்து வைத்திருந்தால், தேவையில்லாத விபரீதங்களையும் உயிரிழப்புகளையும் தவிர்த்திருக்கலாம். தெரியாத ஒன்றைச் செய்வதையும் பரீட்சித்துப் பார்ப்பதையும் முற்றாகத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

அப்படியும் இல்லாவிட்டால், எச்சரிக்கை, அறிவுறுத்தல்களை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். தலைக்கனத்துடன் செயற்படுவோமாயின், உயிருக்கு உத்தரவாதமில்லாத, பல விநோதங்களுக்குள் சிக்கி, இரையாக வேண்டும். அடுத்தவர்களுக்கும் அதுபெரும் பங்கமாகவே அமையும். ஏப்ரல் 13ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதிவரையிலான ஐந்து நாள்களுக்குள் நாடளாவிய ரீதியில், இடம்பெற்ற 399 விபத்துகளில் 52 பேர் பலியாகியுள்ளனர். அதில் காயமடைந்தவர், நிரந்தரமாக ஊனமடையகக்கூடிய காயங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பிலான விவரங்கள் எவையும் வெளியாகவில்லை. இந்த மரணங்கள் யாவுமே தற்செயலானவை அல்ல.

அதற்கப்பால் இயற்கை அனர்த்தங்களும் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றன என்பதால் அவதானமாக இருப்பதன் ஊடாகவே, சகல பாதுகாப்புக்கும் உத்தரவாதமளிக்கலாம். ஆகையால், கடந்தகால அனுபவங்களைச் சகலரும் ஒரு படிப்பினையாகக் கொள்ளவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .