2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வீறுகொண்டெழும் ‘வளர்சிதை மாற்றம்’; எல்லைகளைக் கடக்காதீர்

Editorial   / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீறுகொண்டெழும் ‘வளர்சிதை மாற்றம்’; எல்லைகளைக் கடக்காதீர்

‘சுயபுத்தி வேண்டும்; அல்லது, சொல் புத்தியேனும் வேண்டும்’ எனப் பலரும் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றோம் ஆனால், எத்தனை தடவைகள் அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தினாலும் கேட்கவில்லையெனில், ‘தொற்றை’ வேண்டுமென்றே தொற்றிக்கொள்வதை விடவும் வேறொன்றுமே இல்லை.

கொரோனா வைரஸின் வீரியம் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் நிலையில், புதுவகையான​ வைரஸ், மிகவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. பிரிட்டனில் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் அந்த வைரஸ், ‘501.வி2’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ஏனைய நாடுகள், தமது வான் எல்லைகளை  இழுத்து மூடிவிட்டன. இன்னும் பல நாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

பிரிட்டன் ஊடாக, கடந்த மூன்று மாதங்களுக்குள் பயணம் செய்தவர்கள், பரிசோதனைகளை முன்னெடுத்துக் கொள்ளுமாறு, நாடுகள் பலவும் அறிவுறுத்தியுள்ளன. வான் வலையமைப்புகள் மீண்டும் முடங்குவதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன.

ஆனால், நமது நாட்டின் வான் எல்லை, டிசெம்பர் 26ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு நாட்டையும் மூடி வைத்துக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகரமுடியாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும், முன்னேற்பாடுகள், வரையறைகளை இறுக்கவேண்டும்; இல்லையேல் கட்டுக்கடங்காமல் போகும்.

இதனிடையே, முடக்கப்பட்டிருக்கும் மிகவும் அபாயகரமான பிரதேசங்களிலிருந்து எல்லைகளைக் கடக்கவேண்டாமென சுகாதார பணியகம் அறிவுறுத்தியுள்ளது. பண்டிகைகளுக்கான நாள்கள் நெருக்கிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், ஒவ்வொருவரும்​ தமது சொந்த இடங்களுக்குச் செல்வதிலேயே குறியாக இருப்பர்.

வீடுகளுக்குள் முடங்கிக்கிடப்போரின் கால்கள், ‘துருதுரு’வென இருக்கும்; மனம் இழுத்துச் செல்லும். ஆனால், இம்முறை போனால் போகட்டும்; அடுத்தடுத்த வருடங்களில் கொண்டாடிக்கொள்வோம் எனச் சிந்தித்தால் மட்டுமே, பேரபாயத்தில் இருந்து தற்பாதுகாத்துக் கொள்ளலாம்.

கொவிட்-19 நோயைப் பரப்பும் கோரோனா வைரஸில், புதிய ‘வளர்சிதை மாற்றம்’ ஏற்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது. ‘வளர்சிதை மாற்றம்’ என்பது, உயிர்வாழ்வதற்காக உயிரினங்களில் நடைபெறும் ஒரு தொகுதி ‘வேதி வினைகள் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வேதிவினைகள் உயிரினங்கள் வளர்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் தமது உடலமைப்பைப் பராமரிப்பதற்கும் உதவுகின்றன.

‘வளர்சிதை மாற்றம்’ என்பது, ‘சிதைமாற்றம்’ ‘வளர்மாற்றம்’ என இரண்டு வகையாகப் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றது ‘சிதைமாற்றம்’ பெரிய மூலக்கூறுகளைச் சிறியனவாக உடைக்கின்றன. ‘வளர்மாற்றம்’ சத்தியைப் பயன்படுத்தி, கலத்தின் கூறுகளை உருவாக்குகின்றது. வளர்சிதைமாற்றத்துக்கு நொதியங்கள் மிகவும் இன்றியமையாவையாகும் எனக் கூறப்படுகின்றது.  

ஆகையால், ‘501.வி2’ எவ்வளவு வீரியத்துடன் இருக்குமென்பதைச் சிந்திப்பதே சிறந்து. இது, இளைஞர்களை இலக்குவைத்தே தாக்குமென தென் ஆபிரிக்க நாட்டின் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. அங்கெல்லாம், சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இங்கு, கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காது போய்விட்டது.

புதியதைக் கண்டு அஞ்சிநடுங்குவதைவிட, வருமுன் தற்பாதுகாப்பதே சிறந்தது. வந்தபின் பார்ப்போமெனில் அது மலையேறிவிடும். ஆகையால் எல்லைகளை கடக்காமல் இருப்பதே யாவருக்கும் உசித்தம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .