R.Tharaniya / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்று, இன்னும் 20 நாட்களில் 6 வருடங்கள் நிறைவடையவுள்ளது. எனினும், அன்றைய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் பல தரப்பினரும் உறுதியாக உள்ளனர்.
அவ்வாறானவர்களுக்கு ஓரளவுக்கேனும் மன ஆறுதல் தரும் வகையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மாத்தறை, தெய்யந்தர பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற, தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களின் பரப்புரை கூட்டங்களில், நாங்கள் ஆட்சி பீடம் ஏறினால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், எதிரணியினரும், நீதி, நியாயத்தை எதிர்பார்த்து இருப்போரும், உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் மறந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டினர்.
ஒரு சம்பவம் இடம்பெற்றவுடன், யாரையும் உடனடியாக குற்றவாளியாக்க முடியாது, விசாரணைகளின் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் குற்றவாளியாக முடியும். அதன் பின்னர், நீதிமன்றமே தண்டனையை வழங்கும். இதுவே பொதுவான நடைமுறையாகும். அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதே, எமது நீதிமன்ற நடவடிக்கைகளின் அவதானிப்பாகும்.
நமது நாட்டின் நீதித்துறையில், பல்வேறு மனித வள குறைபாடுகள் இருக்கின்றன. இதனால், ஏராளமான வழக்குக் கோவைகள் தேங்கிக் கிடக்கின்றன. எனினும், சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டியது. தேசிய மக்கள் சக்தியின் பொறுப்பாகும்.
இல்லையேல், வழக்குகள் விசாரிக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டு, காலம் கடந்து விடும். அதன் பின்னர், புதிய அரசாங்கத்தின் மீது சகலரும் கையை நீட்டுவர். உரிய காலத்தில் விசாரணைகளை முன்னெடுத்து, வழக்குத் தாக்கல் செய்யாமல் அரசாங்கம் காலம் கடத்தி விட்டது என்ற குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், பலரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும், தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை அம்பலப்படுத்துவதாகவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பலப்படுத்தினால் மட்டும் போதாது, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் செயற்பாடுகளையும் துரிதப்படுத்த வேண்டும். இல்லையேல், அது
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குண்டாக இருந்து விடும். ஏனெனில், நாங்கள்
ஆட்சிப் பீடம் ஏறியவுடன் குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுப்போம்.
என இன்னும் சில வருடங்களில், எதிர்த்தரப்பினர் கூறக் கூடும். சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தினால் மட்டும், அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுத்தல் மட்டும், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்து விடாது. இது ஓர் ஆறுதல் மட்டுமே தரும் என்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் எடுப்பதே சிறந்தது.
2025.04.01
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025