2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

திருக்கோவில் அடிக்கல் நாட்டு விழா

R.Tharaniya   / 2025 மே 22 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்  108 அடி உயர நவதள இராஜகோபுரத்தின் நான்காம் தளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் புதன்கிழமை (21) அன்று நடைபெற்றது.

முருகப்பெருமான் அருளால் இந்திய சுவாமி ராமானந்தா சரஸ்வதி திருக்கோவிலுக்கு வருகை தந்து இப்பணிக்கு நிதியுதவி நல்கினார். அவரது உபயத்தில் இந்த நான்காவது தளம் அமைக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் எழுப்பப்படும் மிக உயர்ந்த முதலாவது நவதள இராஜகோபுரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக தடைபட்டிருந்த அமைப்பு திருப்பணி வேலைகள் தற்போது தொடர்ச்சியாக நடைபெறுகிறது .

பண்டைய காலத்தில் இராஜராஜ சோழனால் இவ் ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் "கந்தபாணத்துறை” என அழைக்கப்பட்ட திருக்கோவில் சங்க மருவிய காலத்திற்கு பின்பு திருக்கோவில் என அழைக்கப்பட்டது.

ஆலயத்தின் மூலப்பொருளான108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய இராஜகோபுரம் அடித்தளம் இட்டு இதுவரை காலமும் முற்றுப் பெறாத நிலையில் 33 அடி உயரத்தில் காணப்பட்டது.

அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அடுத்த கட்ட திருப்பணியை ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையிலான பரிபாலன சபையினர் கூட்டம் கூடி அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்திருந்தனர்.

அடிக்கல் நாட்டு வேலைகளை தொடங்கும் கிரியைகளை ஆலய  குரு சிவஸ்ரீ அங்குசநாதக் குருக்கள் நடாத்தினார். தொடர்ந்து ஆலயத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் மற்றும் வண்ணக்கர் வ.ஜெயந்தன் செயலாளர் கே. செல்வராசா உள்ளிட்ட பரிபாலன சபையினர் கூடி திருப்பணி வேலைகள் ஆரம்பித்தனர். இதில் ஆலய நிர்வாகத்தினர்  வட்டார பிரதிநிதிகள்,ஊர்ப் பெரியவர்கள், புத்திஜீவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .