2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடாது

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலிகர்

தேசத்தின் வளம் ஒவ்வொரு குடிமகனையும் சார்ந்தது. ஒவ்வொரு குடிமகனும் வளத்திலிருந்து பலன் பெற உரிமை உண்டு.

அரசியலும், மக்களும் காத்திருக்கலாம். ஆனால், வளர்ச்சி காத்திருக்க முடியாது என அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று நடந்தது.

இந்த விழாவில் காணொளி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைச் சிறப்பிக்கும் வகையில் தபால் தலைகளை வெளியிட்டார்.

கடந்த 50 ஆண்டுகளில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

''அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் கடந்த 100 ஆண்டுகளாக உலகின் பல நாடுகளுடன் இந்தியாவின் நட்புறவு வலுவடைய பங்களிப்பு செய்துள்ளது.

அலிகர் பல்கலைக்கழகத்தில் உருது, அரபி மொழி, பாரசீக மொழிகளில் இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்துச் செய்யப்படும் ஆய்வுகள் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகோடு இந்தியக் கலாசாரம் கொண்டுள்ள உறவுகளுக்குப் புதிய உத்வேகம் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.

மதத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்க்காமல் மத்திய அரசு கொள்கைகளை வகுத்து, எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் பலன்கள் கிடைத்து வருகின்றன.

இந்த நாடு வளர்ச்சியை நோக்கி நகரும்போது, வளர்ச்சி அடையும்போது, ஒவ்வொரு குடிமகனும் அதிலிருந்து எந்தவிதமான பாகுபாடின்றி பலன் பெறலாம். மக்கள் காத்திருக்கலாம், அரசியல் காத்திருக்கலாம், ஆனால், வளர்ச்சி காத்திருக்காது. அரசியல் கண்ணாடி கொண்டு வளர்ச்சியைப் பார்க்கக் கூடாது.

சிலர் எங்கு பார்த்தாலும் எதிர்மறையைப் பரப்புகிறார்கள். புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒரு தளத்தில் ஒன்றுசேர வேண்டும்''.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .