2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

உயரங்களை தொடுகிறது இந்தியா

Editorial   / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மேற்கு பசிபிக் பகுதியிலிருந்து இந்தியப் பெருங்கடல் பகுதி வரை, புவியியல் ரீதியாக சவால்கள் நிறைந்த  மூலோபாய நகா்வுகளை எதிர்கொண்டு வருகிறது.

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் அதன் ஆற்றலை பிராந்தியத்தில் விரிவு படுத்தி வருகிறது. இதன் காரணமாக,  சீனாவின் இராணுவ ரீதியிலான அச்சுறுத்தல்கள் தன் மீது அண்மித்து வருவதாக இந்தியா நம்புகிறது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இருமுனை இராணுவ சவால்களைக் கருத்தில் கொண்டு, அதன் போரியல் ரீதியலான வலிமையை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.  இதன் அடிப்படையில், இந்தியாவின் இராணுவ ரீதியிலான வலிமையை நோக்கிய  நகா்வுகள் மேலோங்கி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

தனது வலிமையை பறைசாற்றும் நோக்கில்  “ஏரோ இந்தியா” என்ற கண்காட்சியை தொடராக இந்தியா நடாத்தி வருகிறது. 2023ம் ஆண்டிற்கான கண்காட்சியை இந்தியப் பிரதமா் மோடி அண்மையில் ஆரம்பித்து வைத்தாா்.

இந்தியா இன்று புதிய உயரங்களைத் தொட்டு, அவற்றையும் தாண்டி வருவதாகவும்,  நிலத்தில் தொடங்கி ஆகாயம் வரை பல்வேறு புதிய வாய்ப்புகளை அடைந்திருப்பதாகவும், பாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய கண்டுபிடிப்புக்கான வழிகளை கண்டிருப்பதாகவும் இந்தக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்த இந்தியப் பிரதமா் மோடி பெருமிதம் கொண்டாா்.  இந்தியாவின் பெங்களூரு  நகரில் இடம்பெற்ற  ஏரோ இந்தியா 2023 கண்காட்சியை திறந்து வைத்து பிரதமா் மோடி உரையாற்றினாா்.

‘ஏரோ இந்தியா’ கண்காட்சி என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் பெங்களூருவில் நடைபெறும் நிகழ்வாகும். இது ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சிகளில் ஒன்றாகும். இது விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னெற்றங்களை  காட்சிப்படுத்துகிறது. இந்த கண்காட்சியானது விண்வெளி நிறுவனங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசு சாா்ந்த மற்றும் தனியாா்  நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் தொடா்புகளை உருவாக்கவும், வணிக கூட்டாண்மைகளை உருவாக்கவும் ஒரு தளமாக பயன்படுத்தப்படுகிறது. ஏரோ இந்தியாவின் முதலாவது கண்காட்சி 1996ம் ஆண்டு இடம்பெற்றது.  இதன் 14வது கண்காட்சி  இந்தியாவின்  பெங்களூரு விமானப்படைத் தளத்தில் பெப்ரவரி மாதம் 13 முதல் 17ம் திகதி வரை  இடம்பெற்றது.

80-க்கும் அதிகமான  நாடுகள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றிருந்தன. மேலும் 800 பாதுகாப்பு நிறுவனங்கள், சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.

‘மேக் இன் இந்தியா, மேக் ஃபோர் தி வேர்ல்ட்’ என்ற இந்தியப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்களை, தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் போன்றவற்றில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தியிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.  இவ்வருடம் இடம்பெற்ற  ஏரோ இந்தியா 2023 இன் கருப்பொருள் “ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை” என்பதாகும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல் மற்றும் விமானத்துறையில் பிற நாடுகளுடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் போன்ற  நோக்கிலேயே இந்த ஏரோ இந்தியா கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஏரோ இந்தியா 2023- கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

இந்த கண்காட்சியின்  போது, இந்திய விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த பல உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் பங்குபற்றியிருந்தனா்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவின் திறன்களுக்கு பெங்களூரு சாட்சியாக உள்ளது என்றார். "இந்த புதிய உயரம்தான் புதிய இந்தியாவின் உண்மை நிலையாக உள்ளது. இன்று இந்தியா புதிய உயரங்களைத் தொட்டு, அவற்றையும் தாண்டி வருகிறது. நிலத்தில் தொடங்கி ஆகாயம் வரை பல்வேறு புதிய வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், பாதுகாப்பில் புதிய கண்டுபிடிப்புக்கான வழிகளைத் திறப்பதற்கும்  இந்த விமான கண்காட்சி வழிசெய்யும் என பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஏரோ இந்தியா 2023 ஒரு சிறந்த உதாரணம் என்றும், இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்வது முழு உலகமும் இந்தியாவின் மீது காட்டும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள்  உட்பட 700க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். ஏரோ இந்தியா 2023 இன் கருப்பொருள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, 'ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை', என்ற கருப்பொருள், தற்சார்பு இந்தியாவின் வலிமையை ஒவ்வொரு நாளும் வளர்த்து செல்கிறது என்று தெரிவித்தார்.

மாறி வரும் புதிய இந்தியாவின் அணுகுமுறையை பிரதிப்பலிக்கின்ற ஏரோ இந்தியா 2023 ன் சிறப்பை  எடுத்துரைத்த பிரதமர் மோடி, “புதிய சிந்தனையோடும், புதிய அணுகுமுறையோடும் நாடு  முன்னேறும் போது, அதன் நடைமுறைகளும் அதற்கேற்ப புதிய சிந்தனைக்கான மாற்றத்தைத் தொடங்கவேண்டும்” என்றார். ஏரோ இந்தியா முன்பு வெறும் காட்சியாகவும், இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான வழியாகவும் மட்டும் இருந்ததை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி , இப்போது அந்தக் கண்ணோட்டம் மாறியிருக்கிறது,  கடினமான பாதுகாப்புத்துறையில் கடந்த 9 ஆண்டுகளில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளோம். பாதுகாப்பு துறையில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். 2024 - 25க்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டொலராக உயர்த்துவதே இலக்கு. இன்றைய இந்தியா வேகமாக சிந்திக்கிறது, விரைவான முடிவுகளை எடுக்கிறது என்றும் கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில், பல ராணுவ மற்றும் சிவில் விமானங்கள் மற்றும் விண்வெளி தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,  இந்த ஏரோ கண்காட்சி,  நாட்டின் உற்பத்தித் திறனையும், அதன் உள்நாட்டு கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களையும் வெளிப்படுத்தும் என்று தெரிவித்தார்.  வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டணியை நிறுவுவதும் முன்னுரிமையாக இருக்கும்  என்றும் விமானத் துறையை பெரிதும் முன்னேற்றும் என்றும் கூறினாா்.

‘ஏரோ இந்தியா 2023’ நிகழ்வில் 98 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நிகழ்வில் 32 பாதுகாப்பு அமைச்சர்கள், 29 விமானப் படைத் தளபதிகள் மற்றும் சர்வதேச மட்டத்திலுள்ள பல துறைசாா் நிபுணா்கள் கலந்து கொண்டனா்.

பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்காக ஒன்­றி­ணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை  நட்பு நாடுகளுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.

பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்­கள் கலந்துகொண்ட கண்காட்சி நிகழ்வில் ராஜ்நாத் சிங் பேசியபோது, “உதவி தேவைப்படும் நாடுகளுக்கு அறிவுரைகள் கூறுவதோ வெளிப்படைத் தன்மையின்றி தீர்வுகளை வழங்குவதோ எந்த ஒரு பயனும் தராது. இதில் இந்தியாவுக்கும் நம்பிக்கை இல்லையென்று கூறிய அவா், வளர்ந்த நாடு என்பதாலும் ராணுவம், தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடு என்பதாலும் ஒரு நாடு மற்ற நாட்டிடம் அதிகாரத் தோரணையுடன் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்று கூறினார்.

உதவி என்பது நிறுவனங்களைக் கட்டமைப்பதாக, இணக்கமான முறையில் செயல்படுவதாக இருக்கவேண்டும் என்றும் இந்தியா தனது நட்பு நாடுகளுக்கு இத்தகைய பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்கவே விரும்புகிறது என்றும் அவா் கூறினார்.

இந்த நிகழ்வில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகசங்களை பிரதமர் மோடி உட்பட  வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிட்டனர். விமான கண்காட்சியில் மொத்தம் 807 அரங்குகள் அமைக்கப்பட இருந்தன.  அவற்றில் 107 அரங்குகள் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தன. பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே ரூ.75,000 கோடி முதலீடுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும், 251 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் அறிய வருகிறது.

ஏரோ இந்தியா கண்காட்சியானது விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கும், இந்திய அரசு மற்றும் ராணுவத்திற்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. அரச மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களின் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம், சமீபத்திய இராணுவ ரீதியிலான தயாரிப்புகளின் முன்னேற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் இந்தக் கண்காட்சி ஒரு முக்கிய தளத்தை வழங்குகிறது. முதலீடுகளை ஈர்க்கவும், ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை ஊக்குவிக்கவும், இந்தியாவின் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த கண்காட்சி உதவுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .