2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கேரளாவை மிரட்டும் புதிய வகை வைரஸ்

Freelancer   / 2022 ஜூன் 07 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞம் பகுதியில் பாடசாலைக்குச் சென்ற சில மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பின்னர், சிலருக்கு வாந்தி,  மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

மாணவர்களின் இரத்த மாதிரி பரிசோதனை முடிவில் இரண்டு  மாணவர்களுக்கு புதிய வகை நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 

நோரோ வைரஸ் பாதித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம்,  தலைவலி, காய்ச்சல், அடி வயிற்றில் வீக்கம் போன்றவை ஏற்படும்.

வாந்தி, வயிற்று போக்கு அதிகமானால் நீரிழப்பு ஏற்படும். இதனால் உடல் பலவீனம் அடைந்து நோய் பாதிப்பு அதிகரிக்கும்.

நோரோ வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களிடம் தொடர்பில் இருப்போருக்கும் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது. நோயாளிகளின் வாந்தி,  அவர்களின் உமிழ் நீர் மூலமும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. 

நோரோ வைரஸ் பாதிப்பை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, சுத்தமான தண்ணீரை நன்றாகச் சுடவைத்து குடிக்க வேண்டும். கிணறுகள், தொட்டிகளை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவிய பின்பே பயன்படுத்த வேண்டும். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

இந்த நோரோ வைரஸ், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

தற்போது மேலும் 5 மாணவர்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .