2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கொரோனா மரணங்களை மறைத்த அதிகாரிகள்!

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 23 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவை:

 கோவை மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், கடந்த மே மாதத்தில் மட்டும், 2,587 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலளிக்காமல் கோவை மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மௌனம் சாதிப்பதும், உண்மை விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க மறுப்பதும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில், கடந்த 2019ஆம் ஆண்டு, கொரோனா அலை எதுவும் இல்லாத நிலையில் மே மாதத்தில் 683 பேர், வேறு நோய்களால் உயிரிழந்துள்ளனர். அடுத்த ஆண்டில் அதாவது, 2020ஆம் ஆண்டு, மே மாதம், கொரோனா முதல் அலையின்போது, 536 பேர் உயிரிழந்தனர்.கடந்த மே மாதத்தில் 2,587 பேர் இறந்துள்ளனர் என, சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், கொரோனாவால் உயிரிழந்தவர்கள், 321 பேர் மட்டுமே என, கணக்கு கூறப்படுகிறது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த மே மாதத்தில் கூடுதலாக 2,266 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களில் பலரும், 'நெகட்டிவ்' என முடிவு, வந்த பிறகும் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகள் 'கொரோனா இறப்பு' கணக்கில் சேர்க்கப்படவில்லை என, கூறப்படுகிறது.

கொரோனா உயிரிழப்புகளை குறைத்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மூச்சுத்திணறல், சர்க்கரை, மாரடைப்பு, நிமோனியா என, பக்க விளைவு பாதிப்புகளால் உயிரிழந்ததாக இறப்பு சான்றுகள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களின் இறப்பு கொரோனா இறப்பு கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. வயதானோர் மட்டுமின்றி, நடுத்தர வயதினரும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X