2025 மே 08, வியாழக்கிழமை

சொகுசு கார் விபத்து சிறுவனைக் காப்பாற்ற அரங்கேறும் தில்லுமுல்லு

Freelancer   / 2024 மே 28 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது சிறுவன் மது அருந்திவிட்டு ஏற்படுத்திய விபத்தில், ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வேந்தாந்த் அகர்வாலைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பீட்சா, பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையில், சிறுவனுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், தொடர் விமர்சனங்களின் விளைவாக, அந்தச் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் இரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, பொலிஸார் சிறுவனின் தந்தையும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான விஷால் அகர்வாலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, குறித்த சிறுவனின் குடும்ப கார் ஓட்டுநரை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்குமாறு வற்புறுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், சிறுவன் வேந்தாந்த் அகர்வாலின் தாத்தா சுரேந்திரா அகர்வாலை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், சிறுவனை காப்பாற்ற அவனது இரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றி கொடுக்க தொழிலதிபர் குடும்பம் தங்களது பணபலத்தை பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணையில், சிறுவன் மது அருந்தியதை உறுதி செய்ய புனேவில் உள்ள அரசு மருத்துவமனையான சசூன் மருத்துவமனைக்கு சிறுவன் இரத்த பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ஆனால், அந்த அறிக்கையில், சிறுவன் மது அருந்தவில்லை என அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளியானது.

இது தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில், சிறுவனை காப்பாற்ற அவனது குடும்பம், தங்களது பணபலத்தை பயன்படுத்தி, தடயவியல் மருத்துவர்களிடம் அறிக்கையை மாற்றி கொடுக்கும்படி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில், அறிக்கையை மாற்றி கொடுத்து மோசடி செய்த இரண்டு மருத்துவர்களையும் குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X