2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜி20 தலைமைத்துவமும் சூழலை பாதுகாப்பதற்கான நகா்வுகளும்

Editorial   / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஜி20 தலைமைத்துவமும் சூழலை பாதுகாக்கும் ஆற்றல் மாற்றத்திற்கான அதன் நகா்வுகளும்

2023 ஆம் ஆண்டிற்கான ஜி 20 தலைமைத்துவத்தை வகிக்கின்ற நாடு என்ற வகையில், பல்வேறு தளங்களில் அது எடுத்துள்ள உறுதிமொழிகளுக்கான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற COP26 பருவநிலை மாநாட்டின் போது, காலநிலை மாற்றம் குறித்த இந்தியாவின்  உறுதிமொழி, COP27 பருவநிலை  மாநாட்டின் போது ஐக்கிய நாடுகள் சபைக்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, ஆற்றல் மாற்றத்திற்கான அவசரத் தேவையையும், அதுசா்ந்த உலகளாவிய பொறுப்புகளுக்கு  புத்துயிர் அளிப்பதில் இந்தியாவின் வகிபாகம்  முக்கியமானதாக பாா்க்கப்படுகிறது.

கடந்த பருவ நிலை மாநாட்டில், சூழல் பாதுகாப்பு தொடா்பான உறுதிமொழியின் ஒரு பகுதியாக, இந்தியா  பருவ நிலை நடவடிக்கையின் ஐந்து அமிா்த கூறுகளை “பஞ்சாமிா்தம்” (Panchamrit) என்ற பெயரில் முன்வைத்தது. சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி  இந்தியா முன்வைத்த இந்த பஞ்சாமிா்த கூறுகளை உலகின் பல நாடுகள், பலதரப்பு நிறுவனங்கள் உட்பட  சூழலியல் வல்லுநா்களும், புத்தி ஜீவிகளும் பாராட்டியுள்ளனா்.

பருவநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி 2021ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு  வரையிலான கால கட்டத்திற்காக, உறுதி செய்யப்பட்டுள்ள எட்டு தேசிய இலக்குகளை இந்தியா வழிமொழிந்துள்ளது. எதிா் வரும்  2030-ஆம் ஆண்டிற்குள் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை 35 சதவீதமாகக் குறைக்க இந்திய மத்திய அரசு உறுதியேற்றுள்ளது. தகுந்த தொழில்நுட்பங்களின் உதவியுடன் 2030-ஆம் ஆண்டிற்குள் 40 சதவீத எரிசக்தித் தேவைகளை சூரியசக்தி போன்றவை மூலம் பயன்படுத்த முயற்சிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

மேலும் 300 கோடி டன்கள் அளவிற்கு கரியமில வாயுவை உறிஞ்சும் வகையில், காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்துதல் போன்ற இலக்குகளில் செயல்படுவதற்கு இந்திய மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முன்வைத்துள்ள பஞ்சாமிர்தத்தின் மூலம், 2030ம் ஆண்டுக்குள் 500 GW மின் திறனை புதைபடிவம் அற்ற (Non-Fossil Energy) ஆற்றலிலிருந்து அடைய விரும்புகிறது.  2030க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து அதன் ஆற்றல் தேவைகளில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்கும்,  2030 ஆண்டு  வரை திட்டமிடப்பட்ட கார்பன் உமிழ்வை ஒரு பில்லியன் டன்கள் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காலநிலை தொடா்பான நடவடிக்கைகளை காத்திரமான முறையில் செயல்படுத்துவதற்கு வளர்ச்சியடைந்த  நாடுகளின் தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதாரங்களை வளரும் நாடுகளுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தியா வலியுறுத்தியது.

பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள் ஊடாக சிறந்த  முன்முயற்சிகளுக்கு இந்தியா தயாராகி வருகிறது. உலக நாடுகளின் சுபீட்சத்திற்காக தனது அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு G20 தலைமைத்துவம்  ஒரு சிறந்த  வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தலைமை

உலகில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை (Renewable Energy) பெற்றுள்ள  மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. அது தவிர,  நான்காவது பெரிய காற்றாலை (Wind Energy) ஆற்றல் திறனைப் பெற்ற நாடாகவும் உள்ளது.

சூரிய மின் (Solar Energy) ஆற்றலைப் பொறுத்தவரை உலகில்  ஐந்தாவது பெரிய சூரிய மின் திறன் ஆற்றலை இந்தியா பெற்றிருக்கிறது.  உலகில் வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

தேசிய ஹைட்ரஜன் மிஷன் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள்

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின உரையில், தேசிய ஹைட்ரஜன் கொள்கைத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இந்தியாவில் தொழில் மற்றும் பொருளாதாரத் துறைகளினால் ஏற்படும் சூழல்  மாசடைதலை குறைக்கும் செயற் திட்டத்தை பிரதமா் மோடி தனதுரையில் வலியுறுத்தி இருந்தாா்.  

உலகளவில் தொழில் துறையில் முன்னேற்றமடைந்த நாடுகள் வெளியேற்றும் கரியமில வாயு உலகை அனா்த்தங்களுக்கும் பேரிடா்களுக்கும்  தள்ளி வருகிறது. அழிவுக்கு தள்ளும் கரியமில வாயுவின் வெளியேற்றத்தை  குறைக்கும் திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரி சக்தியின் மூலம் உலகளாவிய ரீதியில் தூய்மையான எரிசக்தி மாற்றம் ஒன்றுக்கான உத்வேகமாக செயல்பாடுகளை இந்தியா வலியுறுத்தி வருகிறது.

உலகளவில் கரியமில வாயுவை வெளியேற்றுவது பற்றி குளோபல் கார்பன் புராஜெக்ட் (Global Carbon Project) என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆய்வில்,  2017ம் வருடத்தில் மட்டும் உலகில் கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகள் தரப்படுத்தப்பட்டன. இதில்  சீனா 27 சதவீதத்தையும், அமெரிக்கா 15 சதவீதத்தையும், ஐரோப்பிய யூனியன் 10 சதவீதத்தையும், இந்தியா 7 சதவீதத்தையும் வெளியிடும் முதல் நான்கு நாடுகளாக இடம் பிடித்ததிருந்தன.

மேலும், இந்த ஆய்வில் கரியமில வாயுவை வெளியேற்றும் முதல் 10 இடங்களில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இருப்பதாகவும்  தெரிய வந்தது.

சூழலை பாதுகாப்பது தொடா்பான இந்தியா முன்வைத்துள்ள  செயல் திட்டம்,  சூழல் மாசற்ற  பசுமை மிகுந்த சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுவதற்கான செயல் திட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டென்மார்க், அவுஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2022ல் பசுமை ஹைட்ரஜனை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

உலகளாவிய உயிரி எரிபொருள்கள் கூட்டமைப்பு

அண்மையில் இடம்பெற்ற வொய்ஸ் ஒஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டில், இந்திய மத்திய பெட்ரோலியத்துறை மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உயிரி எரிபொருளின் நன்மைகளை வலியுறுத்தியிருந்தாா். G20 அமைப்பின் கீழ் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணிக்கான இந்தியாவின் திட்டத்தை அவா் அறிவித்தார். உயிரி எரிபொருட்கள் மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்பத்தை அதிகப்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதே இந்த உயிரி எரிபொருள்  கூட்டணியின் நோக்கமாகும் என்றும் அவா் கூறினாா்.

சர்வதேச சூரிய சக்தி கூட்டணி

இந்தியாவும் பிரான்சும் இணைந்து சூரிய ஆற்றலை பயன்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிரான முயற்சிகளை முன்னெடுக்க சர்வதேச ரீதியில்  சூரிய சக்தியை பயன்படுத்தும் ஒரு கூட்டணியை (International Solar Alliance - ISA) உருவாக்கியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த கூட்டணியில் சேர தகுதி பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் இணைந்து செயற்படுவதற்கு  தற்போது 110 நாடுகள் இதற்கான  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய ஆற்றல் மிகுந்த செயற்பாடுகள் பேசுபொருளாக மாறி வரும் நிலையில், ஜி 20 தலைமைத்துவத்தை பயன்படுத்தி  இந்தியா எவ்வாறு தனது ஆற்றல் மாற்ற திட்டத்தை வழிநடத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா கடந்த காலங்களில் பெற்றுள்ள  அனுபவத்தைப் பயன்படுத்தி, சிறந்த நடைமுறைகள் ஊடாக,  சூரிய சக்தி மற்றும் உயிரி எரிபொருள்களை பயன்படுத்தி உலகளாவிய தூய்மையான ஆற்றல் மாற்றம் ஒன்றுக்கான வழிகாட்டலை வழங்க உறுதி பூண்டுள்ளது.

அண்மையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தினேஷ் தயானந்த் ஜக்டேல் டிடி இந்தியா என்ற  ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில்,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் மற்றும் அதன் நிலைப்பாட்டால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளதோடு, திட்டமிட்டதை விட ஒன்பது வருடங்கள் முன்னதாகவே இந்தியா 2030 ஆம் ஆண்டிற்கான அதன் இலக்குகளை தாண்டியுள்ளதாகவும் கூறியுள்ளாா்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தலைமையை ஏற்று, G20 நாடுகளின் கூட்டணியின் பங்களிப்பின்  மூலம் உலகளாவிய ஆற்றல் மாற்றத்தைத் தொடர்ந்து வழிநடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா ஜி 20 தலைமையின் கீழ் ஆற்றல் மாற்றம் பணிக்குழுவின் ஒரு பகுதியாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அதிகரிப்பதற்கான முன்னுரிமைகளை அடையாளம் கண்டுள்ளது,

உயிரி எரிபொருள்கள் உற்பத்தி, மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வளர்ப்பது தொடா்பாகவும், கூட்டு நடவடிக்கையின் மூலம் அதன் முன்னேற்றத்தை உலகின் பசுமை ஆற்றல் மாற்றத்திற்கு   எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான எடுத்துக்காட்டையும்  இந்தியா முன்வைத்திருக்கிறது.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .