2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பட்டாசால் விட்டோடிய மணமகன்

Ilango Bharathy   / 2021 ஜூன் 14 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண வைபவங்களை ஆடம்பரமாக நடத்துவதென்பது பலரதும் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், சமூகத்தில் தமது அந்தஸ்தை நிலைநாட்டும் விதமாக போட்டி போட்டுக்கொண்டு இவ்வாறான ஆடம்பரத் திருமணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வசதி படைத்தவர்களும் சரி தம் சக்திக்கு மீறி  செலவு செய்ய முனையும் நடுத்தர வர்க்கத்தினரும் சரி, இவ்வாறான ஆடம்பரத் திருமணங்களால் ஈர்க்கப்பட்டுள்ளதென்னமோ நிஜம்தான்.

இதன் விளைவுகளால் வாழ்நாள் கடனாளியாகி மீள முடியாத கடன் சுமையை சுமப்போர் பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம்.

இவ்வாறான ஆடம்பர திருமணமொன்றில், மாப்பிள்ளை அழைப்பில் கலந்து கொண்ட மணமகன் தெறித்து ஓடிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாஜ் மாவட்டம் ஆம்பலாப்பூர் கிராமத்தில் கடந்த ஜூன் 11ஆம் திகதி திருமண விழாவொன்று இடம்பெற்றது.

அத்திருமண விழாவில் மணமக்களை ஊர்வலமாக அழைத்து செலவதற்காக யானை ஒன்று கொண்டு வரப்பட்டது. மணமகன் ஆனந்த் திரிபாதி யானை மீது அமர்ந்து திருமணம் நடக்கும் இடம் நோக்கி மேள தாளம் முழங்க ஊரவலமாக அழைத்து வரப்பட்டார்.

திருமணம் நடக்கும் இடத்தை வந்தடைந்ததும் அங்கு மணமகனை வரவேற்பதற்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்த வெடிச் சத்தம் கேட்டதும் உச்சக்கட்ட கோபத்துக்கு சென்ற யானை அங்கிருந்த 2 கார்கள் உள்ளிட்ட வாகனங்களைத் தூக்கி பந்தாடியது. இதனால் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் பொதுமக்கள் பீதி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். மணமகனும் பதறியடித்துக் கொண்டு ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார்.

யானைப்பாகன் அதனை சமாதானப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டபோதும் அதனை ஏற்க மறுத்த யானை பிளிரியபடி அங்கும் இங்கும் ஓடி துதிக்கையில் கிடைப்பதையெல்லாம் வீசியெறிந்து, திருமணப்பந்தலையும், இரண்டு கார்களையும் துவம்சம் செய்தது. இறுதியாக யானைப்பாகன் செய்த முயற்சியால் யானை சமாதானம் அடைந்தது.

ஆனால் யானை செய்த ரகளையால் உற்றார், உறவினர்களுடன் கலகலப்பாக இருந்த திருமண விழா ஒரு சில நிமிடத்தில் அப்படியே தலைகீழாக மாறி விட்டது. இச்சம்பவமானது மணமக்களுக்கு மட்டும் இல்லாது அத்திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்  மறக்க முடியாத நாளாக மாறி விட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .