2026 மார்ச் 07, சனிக்கிழமை

புதையல் தோண்டச் சென்ற இருவர் நச்சுக் காற்றுத் தாக்கிப் பலி

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 29 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமிக்கடியில் புதையல் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் சுரங்கம் தோண்டியவர்கள், நச்சுக் காற்றுத் தாக்கி உயிரிழந்த துயர நிகழ்வு தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள திருவள்ளுவர் காலனியை சேர்ந்த முத்தையா என்பவரது வீட்டில் புதையல் எடுப்பதற்காக சுமார் 50 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டிய போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர். வேறு இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முத்தையா வீட்டுக்கு பின்னால் உள்ள காலி இடத்தில் புதையல் இருப்பதாக சிலர் கூறியதை நம்பி கடந்த சில மாதங்களாக வெளியே யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் சுமார் 50 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, அதிலிருந்து ஐந்து அடி நீளத்துக்கு சுரங்கம் தோண்டி வந்துள்ளனர்.

 இந்நிலையில் ஞாயிற்றுகிழமை முத்தையா மகன் சிவமாலை, சிவவேலன் மற்றும் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ரகுபதி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த நிர்மல் கணபதி ஆகிய நான்கு பேரும் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அன்று மாலை சிவவேலனின் மனைவி ரூபா சுரங்கம் தோண்டுபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அப்போது, சுரங்க வேலை செய்து கொண்டிருந்த நால்வரும் மயங்கிக் கிடந்துள்ளனர். அங்கு சென்ற ரூபாவுக்கும் லேசாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சம் அடைந்த ரூபா அக்கம் பக்கத்தினரிடம் தகவல் கொடுத்துள்ளார்.

 தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தான்குளம்பொலிஸார்,தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று குழிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி நான்கு பேரையும் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நிர்மல் கணபதி, ரகுபதி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

சிவமாலை, சிவவேலன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .