2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

போலியாக தூதரகம் அமைத்து மோசடி செய்தவர் கைது

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 24 , பி.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போலி வெளிநாட்டுத் தூதரகத்தை உருவாக்கி ஒருவர் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் ஜெயின். இவர் காஜியாபாத் பகுதியில் இரண்டு  மாடிகள் கொண்ட சொகுசு மாளிகையை வாடகைக்கு எடுத்து அதில் வெஸ்ட்டார்க்டிகா நாட்டு தூதரகம் என்ற பெயரில் போலி தூதரகத்தை நடத்தி வந்துள்ளார்.

மேலும், அவரது தூதரக வளாகத்தில் விலை உயர்ந்த கார்களை நிறுத்தி வைத்துள்ளார். மேலும், தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் கார்களில் உள்ள இலக்கத் தகடுகளைப் பொருத்தி நகரில் வலம் வந்துள்ளார்.

மேலும், அவரது அலுவலகத்தில் போலியான தூதரக கடவுச்சீட்டுக்கள், பல்வேறு நாடுகளின் நாணயங்கள், பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் உருமாற்றம் செய்யப்பட்ட ஹர்ஷ்வர்த்தனின் புகைப்படங்கள் இருந்துள்ளன.

இங்கிருந்தபடி வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை ஹர்ஷ்வர்த்தன் அனுப்பிக் கொண்டு இருந்தார். இது தவிர ஹவாலா மூலம் பண மோசடியிலும் ஈடுபட்டதாக தெரிகிறது. மத்திய புலனாய்வுத்துறை கொடுத்த தகவலின் பேரில் உத்தரபிரதேச சிறப்பு படை பொலிஸார் அதிரடி சோதனை நடத்தி ஹர்ஷ்வர்த்தன் ஜெயினை அண்மையில் கைது செய்தனர்.

இதுகுறித்து உ.பி. சிறப்பு அதிரடிப் படை அதிகாரி சுஷில் குலே கூறும்போது, “செபோர்கா, பவுல்வியா மற்றும் லோடோனியா போன்ற சிறிய அங்கிகரிக்கப்படாத நாடுகளின் தூதரக பிரதிநிதி என்று ஜெயின் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். மேலும் வெஸ்ட் ஆர்க்டிகா நாட்டின் பெயரில் போலி தூதரகத்தையே நடத்தி வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

வெஸ்ட்டார்க்டிகா நாடு மிகவும் சிறியது ஆகும். அதனை இதுவரை எந்த நாடும் அங்கிகரித்தது கிடையாது. 2001-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கடற்படை அதிகாரி டிராவிஸ் மெக்ஹென்றி என்பவர் வெஸ்ட் ஆர்க்டிகாவை கண்டுபிடித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X