Editorial / 2025 டிசெம்பர் 16 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வழங்கி உள்ளார்.
அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவன் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 12ம் தேதி நள்ளிரவில் இந்தியா வந்தார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் உள்ள அவரது உருவ சிலையை மெஸ்ஸி திறந்து வைத்தார். பிறகு கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்துக்கு மெஸ்ஸி சென்றார்.
அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் டிக்கெட் வாங்கி மைதானத்துக்கு சென்றனர். ஆனால் மெஸ்ஸியை சுற்றி அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் நின்றனர். இதனால மெஸ்ஸியை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. இதனால் அவர்கள் கோபமடைந்து தண்ணீர் பாட்டீல்களை வீசினர்.
இதையடுத்து மெஸ்ஸி அங்கிருந்து வெளியேறினார். அப்போது ஆக்ரோஷமான ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்து அங்கிருந்த இருக்கை, கூடாரம் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். மேலும் கூடாரத்துக்கு தீவைத்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டினர். இதையடுத்து மம்தா பானர்ஜி மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.
அதோடு ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையில், மாநில தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளரை (உள்துறை) உறுப்பினர்களாக கொண்ட உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்தார். பிரச்சனைக்கான காரணம் குறித்து இந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் மெஸ்ஸியின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு மேற்கு வங்க மாநிலத்தின் விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் பலி கிடாவாகி உள்ளார். அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கடிதம் வழங்கி உள்ளார். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிஜிபி ராஜீவ் குமார், பிதான் நகர் காவல் ஆணையம் முகேஷ் குமார் ஆகியோரிடம் நேற்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் , பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி துணை காவல் ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி அனிஷ் சர்க்கார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் நலன், விளையாட்டு துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .