Freelancer / 2025 டிசெம்பர் 13 , மு.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர்.
அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நர்கெஸ் முகமதிசென்றபோது, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
நர்கெஸ் முகமதி, ஈரான் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர்.
குறிப்பாக, ஈரானில் பெண்களின் உரிமைகளை பறிக்கும் கட்டாய ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராகவும், பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதை ஆதரித்தும் அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.
ஈரானில் நடந்த ‘பெண், வாழ்வு, சுதந்திரம்’என்ற இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களில் நர்கெஸ் முகமதியும் ஒருவர். அவருடைய மனித உரிமைகளுக்கான சேவையை போற்றும் விதமாக, அவருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் கூட, அவர் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்தபடி, ஈரான் அரசுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகளும் செய்திகளும் உலக அளவில் கவனத்தை ஈர்த்தன.
நர்கெஸ் முகமதி இதுவரை 10 இற்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர் மொத்தமாக 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 154 சவுக்கடி தண்டனைக்கு ஆளாகியுள்ளார். தற்போது அவர் சிறைக்குச் செல்லாமல், பிணையில் இருந்தார்.
அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா சபை உட்படப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் ஈரான் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. (a)
2 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Dec 2025