S.Renuka / 2026 மார்ச் 22 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல புலனாய்வு செய்தியாளர் ஐயன் கல்லாகர் (Ian Gallagher) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படையின் ஆதிக்கத்திற்குச் சவால் விட ஈரான் ஒரு பிரம்மாண்டமான 'மறைமுகப் போர்' (Asymmetric Warfare) திட்டத்தைத் தீட்டியுள்ளது.

இதில் நூற்றுக்கணக்கான அதிவேகப் படகுகள் (Speedboats), தற்கொலைப்படை ட்ரோன்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் (Mini-subs) பயன்படுத்தப்பட உள்ளன. அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' போன்ற பிரம்மாண்ட போர்க்கப்பல்களை ஒரே நேரத்தில் பல திசைகளிலிருந்து தாக்கி நிலைதடுமாறச் செய்வதே ஈரானின் இந்த 'ஆர்மடா' திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) இதற்காகத் தனித்துவமான 'சுவர்ம்' (Swarm) எனப்படும் தேனீக் கூட்டம் போன்ற தாக்குதல் முறையை உருவாக்கியுள்ளது. இதில் டார்பிடோக்கள் மற்றும் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட சிறிய வேகப்படகுகள், அமெரிக்கக் கப்பல்களைச் சுற்றி வளைத்துத் தாக்கும்.
அதே நேரத்தில், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட 'தற்கொலைப்படை' கடல்சார் ட்ரோன்கள் கப்பலின் அடிப்பகுதியைக் குறிவைத்து மோதி வெடிக்கச் செய்யும். இவற்றுடன், பாரசீக வளைகுடாவின் ஆழமற்ற பகுதிகளில் மறைந்திருந்து தாக்கும் திறன் கொண்ட 'காதிர்' (Ghadir) ரக சிறிய நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்த ரகசியப் படையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ரகசியக் கடற்படையானது ஈரானின் கடற்கரையோரம் உள்ள கிரானைட் மலைகளுக்குள் குடையப்பட்ட 'மிசைல் சிட்டி' (Missile Cities) எனப்படும் நிலத்தடித் தளங்களில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாகச் செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக ஈரானின் கடற்படைத் தளங்கள் மீது கடுமையான குண்டுவீச்சுகளை நடத்தினாலும், இந்த நிலத்தடித் தளங்களில் உள்ள சிறிய ரகப் படகுகளையும், ட்ரோன்களையும் முற்றிலுமாக அழிக்க முடியவில்லை என்று ராணுவ ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒருவேளை அமெரிக்கத் தரைப்படை ஈரானுக்குள் நுழைந்தால், இந்தப் படைகளை ஏவி அமெரிக்கக் கப்பல்களை மூழ்கடிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
மறுபுறம், அமெரிக்கக் கடற்படை இத்தகைய ' Mosquito Fleet' எனப்படும் கொசுப் படைகளைச் சமாளிக்க தனது கப்பல்களில் 'சீராம்' (SeaRAM) போன்ற அதிநவீனப் பாதுகாப்பு அமைப்புகளையும், லேசர் ஆயுதங்களையும் பொருத்தியுள்ளது.
இருப்பினும், குறுகிய பரப்பளவைக் கொண்ட ஹார்முஸ் நீரிணையில், மிக அருகில் வந்து தாக்கும் ஈரானின் நூற்றுக்கணக்கான படகுகளை ஒரே நேரத்தில் தடுப்பது கடினம் என அஞ்சப்படுகிறது. ஈரானின் இந்த ரகசியப் படையெடுப்புத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், அது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கக் கடற்படை சந்திக்கும் மிகப்பெரிய இழப்பாக அமையும் என்று ஐயன் கல்லாகர் எச்சரித்துள்ளார்.
18 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
2 hours ago