2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ஆஸ்ராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை

Editorial   / 2018 ஏப்ரல் 26 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய சாமியாரான ஆஸ்ராம் பாபுவுக்கு, வன்புணர்வுக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டமைக்காக, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்ப்பு, நேற்று (25) வழங்கப்பட்டது.

77 வயதான ஆஸ்ராம் பாபு, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில், ஆசிரமம் நடத்தி வந்தார். இவரைப் பின்பற்றுவதற்காக, பல மில்லியன் கணக்கானோர் காணப்படுகின்றனர் எனக் கருதப்படுகிறது. எனினும், 2013ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தைச் 16 வயதுச் சிறுமி மீது வன்புணர்வு புரிந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பில், ஆஸ்ராம் பாபு தவிர, மேலும் நால்வர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இதில், இருவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.

சிறுமியொருத்தியை வன்புணர்ந்தமை, சட்டத்துக்கு முரணாக அடைத்து வைத்திருந்தமை, குற்றவியல் அச்சுறுத்தல், குற்றவியல் சதி, பாலியல் துன்புறுத்தல் ஆகிய 5 குற்றச்சாட்டுகள், அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

ஏற்கெனவே, ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆஸ்ராம் பாபு, குற்றவாளியாக நேற்றுக் காலையில் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனை அளவைத் தீர்மானிக்கும் அமர்வு இடம்பெற்றது. அதன்போது, சமூக சேவைகளைப் புரிந்தார் எனத் தெரிவித்து, அவருக்கான குறைந்த தண்டனையை வழங்குமாறு, ஆஸ்ராம் பாபு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரினர். எனினும், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கைத் தவிர, குஜராத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளும், ஆஸ்ராம் பாபுவுக்கும் அவரது மகனுக்கும் எதிராக, வன்புணர்வுக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த செல்வாக்கைக் கொண்ட ஆஸ்ராம் பாபு, உலகம் முழுவதும் சுமார் 400 ஆசிரமங்களைக் கொண்டு நடத்துவதோடு, பல அரசியல்வாதிகளோடும் தொடர்புகளைக் கொண்டவராவார். அவரது வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல மாநிலங்களில், பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X