2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

இந்தோனேஷியத் தாக்குதல்களுக்கு 2 குடும்பங்களே பொறுப்பு

Editorial   / 2018 மே 15 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் 2ஆவது மிகப்பெரிய நகரமான சுரபாயாவில், நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, 5 பேர் கொண்ட குடும்பமொன்றே நடத்தியது என, பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். முன்னதாக, நேற்று முன்தினம் (13) நடத்தப்பட்ட தாக்குதல்களை, 6 பேர் கொண்ட குடும்பமொன்றே நடத்தியிருந்தது என வெளிப்படுத்தியிருந்த நிலையிலேயே, தற்போது இத்தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட அதே சுரபயா நகரத்தின் பொலிஸ் தலைமையகக் கட்டடத்தின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மோட்டார் சைக்கிளொன்றில் வந்த 5 பேர், தம்மைத் தானே வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தினர்.

இதன்போது, குறைந்தது 10 பொதுமக்கள் காயமடைந்தனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில், 5 பேர் வந்தனர் எனவும், அதிலொருவர், மிகக்குறைந்த வயதையுடைய குழந்தை எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.  இத்தாக்குதல்களின் போது, தாக்குதல் நடத்திய குடும்பத்தைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுமியொருத்தி, உயிர்தப்பியிருந்தாள். அச்சிறுமி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். எனினும், அச்சிறுமியின் தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் ஆகியோர் பலியாகினர்.

இத்தாக்குதல்களுக்கு, இதுவரை எக்குழுவும் உரிமை கோரியிருக்கவில்லை.

முன்னதாக, நேற்று முன்தினம் (13) மேற்கொள்ளப்பட்ட 3 தாக்குதல்களுக்கு, ஒரே குடும்பமே காரணமென, பொலிஸார் முன்னர் வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்நகரத்திலுள்ள 3 தேவாலயங்களை இலக்குவைத்து, இந்தத் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்ததோடு, குறைந்தது 13 பேர், இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர், இத்தாக்குதல்களின் விளைவாகக் காயமடைந்தனர்.

இந்நிலையில், இத்தாக்குதல்கள் தொடர்பான விவரங்கள், தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, டீட்டா ஓபிரியார்ட்டோ என்ற குடும்பஸ்தரும் அவரது மனைவியும், அவர்களது 2 மகள்கள், 2 மகன்கள் என, 6 பேரே, இத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இரு மகன்களும், 16, 18 வயதுகளையுடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளதோடு, அவர்கள், சான்டா மரியா கத்தோலிக்கத் தேவாலயத்துக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று, குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, குடும்பத் தலைவரும் ஏனையோரும் ஒரு காரில் சென்று,  டிபோநேகொரோ இந்தோனேஷிய கத்தோலிக்கத் தேவாலயத்தில், மனைவியையும் இரு மகள்களையும் இறக்கிவிட்டுள்ளார். அங்கு வைத்து அவர்கள், தம்மைத் தாமே வெடிக்க வைத்துள்ளனர். மகள் இருவரும், 9, 12 வயதுகளையுடையவர்கள் ஆவர்.

அதைத் தொடர்ந்து, வெடிபொருட்கள் நிரம்பிய தனது காரை, சுரபயா மத்திய பென்தகொஸ்தே தேவாலயத்தின் மீது செலுத்தி, குடும்பத் தலைவர், தாக்குதல் நடத்தியுள்ளார்.

இத்தாக்குதல்களுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோரியுள்ள நிலையில், தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை, பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இவர்கள், சிரியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்குத் திரும்பியிருந்தனர் என, பொலிஸார் முன்னர் கூறியிருந்த போதிலும், தற்போது அக்கருத்தைத் திருத்தி, அவர்கள் சிரியாவுக்குச் சென்றிருக்கவில்லை என, பொலிஸார் நேற்று (14) மாலையில் திருத்தமொன்றை வழங்கினர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவால் உந்தப்பட்ட, ஜெமா அன்ஷரூட் தௌலா என்ற வலையமைப்பாலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டனவென, பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X