2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

இன்றுசந்திர கிரகணம் : நிகழவுள்ள அதிசயத்தை பாருங்கள்

Freelancer   / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழும் மிக நீண்ட முழுச் சந்திர கிரகணம் (Lunar Eclipse 2025) இன்றிரவு நிகழ்கிறது.

இந்தப் பிரபஞ்சம் பல வானியல் அதிசயங்களைக் கொண்டதாகும். இங்கு நிகழும் பல விஷயங்கள் நம்மை வியப்பின் உச்சத்திற்கே போய்விடும். இப்படிக் கூட நடக்குமா என நாம் யோசிக்கும் பல வினோத நிகழ்வுகள் கூட நடக்கும். 

அப்படித் தான் இன்றைய தினம் மிக நீண்ட முழுச் சந்திர கிரகணம் நிகழ்கிறது. கடந்த 2022க்கு பிறகு மிக நீண்ட ஒரு சந்திர கிரகணமாக இது இருக்கும்.

இதுபோல அடுத்த முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க, நாம் 2028 டிசம்பர் 31 வரை காத்திருக்க வேண்டும் என்கிறார் புனேவில் உள்ள தேசிய வானொலி வானியற்பியல் மையத்தின் (National Centre for Radio Astrophysics) இணைப் பேராசிரியருமான திவ்யா ஓபரோய். 

கிரகணங்கள் அரிதானவை என்றும், ஒவ்வொரு பௌர்ணமி அல்லது அமாவாசையிலும் நிகழாது என்றும் ஓபரோய் விளக்கினார். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் பாதை, சூரியனைப் பூமி சுற்றி வரும் பாதையிலிருந்து சுமார் 5 டிகிரி சாய்ந்துள்ளது என்பதே இதற்குக் காரணமாகும்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இன்றைய தினம் சந்திர கிரகணம் இரவு 8:58 மணிக்குத் தொடங்கும். 

சூரிய கிரகணங்களைப் போல இல்லாமல், முழுச் சந்திர கிரகணத்தைக் காணச் சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை. வெறும் கண்கள், டெலஸ்கோப் அல்லது பைனாகுலர்கள் இருந்தாலே போதும் சந்திர கிரகணத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துச் சரிக்கலாம்.

இன்றைய தினம் பகுதி கிரகணம் இரவு 9:57 மணிக்கு ஆரம்பிக்கும். முழுக் கிரகணம் இரவு 11:01 மணிக்குத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், 

"சந்திரன் இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை - மொத்தம் 82 நிமிடங்கள் - முழுமையாக மறைக்கப்படும். பகுதி கிரகணம் அதிகாலை 1:26 மணிக்கு முடிவடையும். கிரகணம் செப்டம்பர் 8ம் திகதி அதிகாலை 2:25 மணிக்கு நிறைவடையும்" என்றார்..

முன்பே குறிப்பிட்டது போலச் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதே இந்தச் சந்திர கிரணமாகும். ஆனால், நமது நாட்டில் கிரகணங்கள் பல மூடநம்பிக்கைகளுடன் தொடர்புடையவை. நமது நாட்டில் கிரகணச் சமயங்களில் மக்கள் பொதுவாக உணவு, நீரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சில சமயங்களில், கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கூட கிரகணங்கள் தீங்கை ஏற்படுத்தும் எனச் சிலர் நம்புகிறார்கள்.

இருப்பினும், சந்திர கிரகணங்கள் வெறும் நிழல் நிகழ்வுகள் என்றும் இவை மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ எந்த ஆபத்தையும் விளைவிப்பதில்லை என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். 

7 ஆண்டுகளின் பின் தோன்றும் குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 77% பேருக்கு இந்த சந்திர கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X