2025 நவம்பர் 05, புதன்கிழமை

‘இறந்தவர்கள் எண்ணிக்கையை விமானப்படை எண்ணுவதில்லை’

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் பாலகொட்டுக்கருகிலுள்ள ஆயுததாரிகளின் முகாமொன்றின் மீதான, கடந்த மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற விமானத் தாக்குதலின் இறந்தவர் எண்ணிக்கையை இந்திய விமானப்படை எண்ணுவதில்லை என இந்திய விமானப்படையின் தலைவர் எயார் சீஃவ் மார்ஷல் பி.எஸ். தனோயா, கோயம்புத்தூரில் நேற்று (04) தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் வழங்கும் எனத் தெரிவித்த பி.எஸ். தனோயா, இலக்கிலிருந்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை அமையும் என செய்தியாளர் மாநாடொன்றில் கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று தெரிவித்திருந்தார்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில், லக்சயா ஜிதோ எனும் நிகழ்ச்சியிலேயே மேற்படி கருத்தை வெளிப்படுத்திய அமித் ஷா,

“உறி தாக்குதலுக்கு பின் இராணுவம் துல்லியத் தாக்குதலை நடத்தியது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பின், உச்ச கட்ட எச்சரிக்கையால், எந்தவிதமான துல்லியத் தாக்குதலையும் நடத்த முடியவில்லை என பலரும் பேசினார்கள். ஆனால், நரேந்திர மோடி அரசாங்கம், புல்வாமா தாக்குதல் நடந்த 13ஆவது நாளில், விமானப் படை மூலம் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதில், 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். நம்முடைய இராணுவ வீரர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் இராணுவத்தால் பிடிக்கப்பட்டவுடன் எதிர்க்கட்சிகள் மீண்டும் பேசத் தொடங்கினர். இதற்கு முன் பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் பிடிபடும் நமது வீரர்களின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

ஆனால், இன்று நிலைமை வேறு. மத்தியில் மோடி தலைமையிலான அரசாங்கம் இருக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தின் எப்-16 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தி அவர்களின் பகுதிக்குள் நமது வீரர் விழுந்த போதிலும், மிகக் குறைந்த நேரத்தில், 48 மணிநேரத்தில் நமது வீரர் மீட்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம் நரேந்திர மோடியின் தலைமைதான்.

உலகில் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு அடுத்தாற்போல், தீவிரவாத செயலுக்கு பழிதீர்க்கும் நாடாக இந்தியா இருக்கிறது” எனக் கூறினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X