S.Renuka / 2026 மார்ச் 01 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சியில் அணுகுண்டுகள் தயாரிக்க முயற்சி நடப்பதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கடந்த 2025 ஜூன் மாதம் ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் உள்ளிட்ட அணுசக்தி தளங்கள் தரைமட்டமாகின.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கமேனி ஆட்சிக்கு எதிராக ஒரு தரப்பினர் நடத்திய போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கில் அமெரிக்க போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, ஈரான் அணு ஆயுத திட்டத்தை கைவிட மறுப்பதாக கூறி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா இப்போது அந்நாட்டின் மீது தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் இஸ்பகான், லோரஸ்தான், இலாம், கெர்மன்ஷா, குவாம், கராஜ், தப்ரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அணுசக்தி தளங்கள், இராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. தெஹ்ரானில் உள்ள கமேனியின் வீடு, அலுவலகம், இராணுவ அலுவலகம், உளவுத் துறை அலுவலகத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியானதாக தகவல்கள் வெளிவருகின்றன.
குறிப்பாக, ஹார்மோஸ்கன் மாகாணம் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியில் சில குண்டுகள் விழுந்ததில் மாணவிகள் உட்பட 85 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலைத் தொடங்கியது.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ஜெருசலேம் நகரங்கள் மற்றும் வடக்கு, மத்திய, தெற்கு பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது.
ரியாத், தோஹா, அபுதாபி, குவைத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ, விமான, கடற்படைத் தளங்களை குறிவைத்து 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன.
இதனிடையே, “உலகின் தீவிரவாத மையமாக ஈரான் உருவெடுத்து உள்ளது. அண்மையில் ஈரான் அரசுக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கான மக்களை அந்த நாட்டு இராணுவம் கொன்று குவித்தது. அணு ஆயுத திட்டத்தை கைவிட அந்த நாடு மறுக்கிறது.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஈரான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக நீடிக்கிறது. இந்த அச்சுறுத்தலை முறியடிக்கவே தற்போது அந்த நாடு மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு இருக்கிறது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்திருந்தார்.
திடீர் தாக்குதல்: அமெரிக்கா, ஈரான் இடையே இருதரப்பு அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஓமன் வெளியுறவு அமைச்சர் பஃதர் பின் ஹமாத் அல் புசைடி நேரடியாக அமெரிக்காவுக்கு சென்றார். மேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் (ஈரானில் காலை 9.30 மணி) ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திடீரென உத்தரவிட்டார்.
அந்த நேரத்தில், ஆளும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி தலைவர்கள் தூக்கத்தில் இருந்ததால் யாருக்கும் தகவல் தெரியவில்லை.
ஈரான் தாக்குதல் தொடர்பாக மத்திய கிழக்கில் உள்ள நட்பு நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்க அரசு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மட்டும் கலந்தாலோசித்து ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
41 minute ago