2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஈரானின் நிபந்தனைகளை பரிசீலிக்கும் அமெரிக்கா

Freelancer   / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்குமானால், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க தயார் என ஈரான் கூறி இருந்த நிலையில், அது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும், அணு ஆயுத முயற்சியை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து நேற்று முன்தினம் ஈரான் தனது நிலைப்பாட்டை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தியது.

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டுமானால், முதலில், ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்பதற்கும், போர் முழுமையாக நிறுத்தப்படுவதற்கும் அமெரிக்கா முறையான உத்தரவாதம் அளிக்க வேண்டும். இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தி நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்படும். அதன் பின்னரே, அணுசக்தி விவகாரம் குறித்து ஈரான் விவாதிக்கும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரானின் இந்த நிபந்தனைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வொஷிங்டன் டிசியில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஈரானின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் என ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ,

அவர்கள் சமர்ப்பிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்ததைவிட இது சிறப்பாகவே உள்ளது. எனினும், இந்த நிலைப்பாடு உண்மையானதா என்ற கேள்வி உள்ளது. அவர்கள் பேச்சு நடத்துவதில் மிகவும் வல்லவர்கள். எனவே, எத்தகைய ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் அது அவர்கள் (ஈரான்) அணு ஆயுதத்தை நோக்கி வேகமாக முன்னேறுவதைத் தடுப்பதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .