Editorial / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி அல் கயிதா அமைப்பின் 19 பயங்கரவாதிகள், 4 வர்த்தக விமானங்களைக் கடத்தினர். அதில், இரண்டு விமானங்கள் மூலம் நியூயோர்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரம் (ட்வின் டவர்) என வர்ணிக்கப்பட்ட இரண்டு மிக உயரமான கட்டிடங்களைத் தாக்கி அழித்தனர். மூன்றாவது விமானத்தின் மூலம் அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகமான பெண்டகன் மீது தாக்குதல் நடத்தினர். மற்றொரு விமானம் பென்சில்வேனியாவில் விளை நிலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து அல் கயிதா அமைப்பின் நிறுவனத் தலைவரான ஒசாமா பின்லேடனை வேட்டையாட அமெரிக்க பாதுகாப்புப் படை முடுக்கிவிடப்பட்டது. அப்போது ஆப்கனிஸ்தானில் இருந்த ஒசாமா பின்லேடன் பின்னர் அங்கிருந்து தப்பி பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கு பதுங்கி இருந்தார். பாகிஸ்தானின் அப்போடாபாத் நகரில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படை கடந்த 2011-ம் ஆண்டு மே2-ம் திகதி சுட்டுக்கொன்றது.
இந்நிலையில், ஒசாமா பின்லேடன் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கொல்லப்பட்டிருக்க வேண்டியவர் என்றும் அவர் பெண் வேடமிட்டு ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் இருந்து தப்பிவிட்டார் என்றும் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
சிஐஏவில் 15 ஆண்டு காலம் பணியாற்றியவரும் பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவருமான ஜான் கிரியாகோ, இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ஒசாமா பின்லேடனும் அல் கயிதா தலைமையும் ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டதாக நாங்கள் நம்பினோம். அவர்கள் வேறு எங்கும் தப்பிக்க முடியாத அளவுக்கு சுற்றிவளைத்துவிட்டோம் என்பது எங்களுக்குத் தெரியும்.
அமெரிக்க பாதுகாப்புப் படையின் மத்திய தளபதிக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த அதிகாரி ஒரு அல் கயிதா ஆதரவாளர் என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அவர்களை மலையில் இருந்து கீழே வரச் சொன்னோம். மொழிபெயர்ப்பாளர் மூலமாகத்தான் நாங்கள் வரச் சொன்னோம். பெண்களையும் குழந்தைகளையும் வெளியேற்ற விரும்புவதாகவும் விடியற்காலை வரை அனுமதிக்க முடியுமா என்றும் அவர்கள் கோரினர். அதன் பிறகு தாங்கள் சரணடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த யோசனையை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது. ஆனால், எங்கள் படையின் மத்திய தளபதி ஜெனரல் பிராங்ஸ் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். அந்த மொழிபெயர்ப்பாளர்தான் அவரை சம்மதிக்க வைத்தார்.
விடியற்காலையில் டோரா போரா குகைகள் காலியாக இருந்ததைப் பார்த்தபோது, நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை தெரிந்து கொண்டோம். அதன் பிறகு நாங்கள் அவரை தொடர்ந்து துரத்தினோம். 2011-ல் அப்போட்டாபாத்தில் அது முடிவுக்கு வந்தது. அன்றே கொல்லப்பட்டிருக்க வேண்டிய ஒசாமா பின்லேடன், 10 ஆண்டுகள் கழித்து கொல்லப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.
13 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
32 minute ago