Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒரு கட்சியைச் சேர்ந்தவர் மற்றொரு அங்கிகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் விதிகளில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சித் தலைவரான எம்.எல். ரவி தாக்கல் செய்த மனுவில்,” நாடாளுமன்ற கீழ்ச்சபைக்கான தேர்தல் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், கொங்கு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்னராஜ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாரிவேந்தர் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று இந்திய நாடாளுமன்ற கீழ்ச்சபை உறுப்பினர்களாக உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர் மற்றொரு அங்கிகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்ட விரோதமானது. ஒரு கட்சியில் பொறுப்பு வகித்துக் கொண்டு மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட சட்டத்தில் இடமில்லை. எனவே தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த நான்கு பேரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும். இதே போன்று கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் (அ.இ.அ.தி.மு.க) சின்னத்தில் போட்டியிட்டதும் செல்லாது. தேர்தல் அதிகாரி இந்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டது தவறு. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்த நான்கு பேரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், என். சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவரை, அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதியளித்தது தேர்தல் விதிமுறைகளை மீறல் ஆகாதா என கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தலில் கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட சின்னம் தானே முக்கியப் பங்கு வகிக்கிறது. வாக்காளர்களான பொது மக்களும் சின்னத்தைப் பார்த்துதான் வாக்களிக்கின்றனர். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. ஆனால் எப்படி போட்டியிடுகிறோம் என்பது முக்கியம் எனக் கருத்து தெரிவித்தனர்.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நிரஞ்சன், ஒரு கட்சியைச் சேர்ந்தவர் மற்றொரு அங்கிகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் விதிகளில் உள்ளது. ஆனால், அந்த வேட்புமனுக்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி எந்த சூழலில் ஏற்றுக்கொண்டார் என்பதைக் கவனிக்க வேண்டும். ஒருவேளை வேட்புமனுவை அவர் ஏற்றுக் கொண்டது தவறு என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் அதனை எதிர்த்து தேர்தல் வழக்குத்தான் தொடர முடியும். பொதுநல வழக்குத் தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை பிறப்பித்துள்ளது. எனவே இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் வெற்றிபெற்ற மற்றும் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரும் இவ்வாண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago