2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கடமைகளைப் புரிந்தமைக்காக 251 ஊடகவியலாளர்கள் சிறைகளில்

Editorial   / 2018 டிசெம்பர் 14 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது கடமைகளைப் புரிந்தமைக்காக, உலகம் முழுவதிலும், 251 ஊடகவியலாளர்கள் சிறைகளில் வாடுகின்றனர் என, ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான செயற்குழு வெளிப்படுத்தியுள்ளது. அவ்வமைப்பால் நேற்று (13) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைகளில் வாடுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்ட 251 ஊடகவியலாளர்கள் என்ற எண்ணிக்கை, இம்மாதம் முதலாம் திகதி வரையிலான எண்ணிக்கையாகும் என, அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரின் அரைவாசிக்கும் மேலானோர், துருக்கி, சீனா, எகிப்து ஆகிய 3 நாடுகளில், சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஊடக சுதந்திரம் மோசமானதாகக் காணப்படும் இந்நாடுகளில், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகக் கருத்துகள், சிறைகளையே தேடிக் கொடுக்கின்றன.

கடந்தாண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 272 ஊடகவியலாளர்கள், கடமைகளுக்காகச் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். எனவே, இவ்வாண்டில் அவ்வெண்ணிக்கை சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், 251 ஊடகவியலாளர்கள் என்பது, மிக அதிகமான எண்ணிக்கை என, அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

அதில் குறிப்பாக, “தவறான செய்தி” வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையிலடைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை, 28 ஆகும். இது, கடந்தாண்டில் இதே குற்றச்சாட்டுக்காகச் சிறையிலடைக்கப்பட்ட 21 பேரோடு ஒப்பிடும் போது, அதிகரிப்பாகும். அதற்கு முன்னர், 2016ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை, 9ஆக இருந்தது.

தன்னை விமர்சிக்கும் ஊடகங்களை, “போலிச் செய்திகள்” என, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தும் விமர்சித்துவரும் நிலையில், அவரது இக்கருத்துகளையும், ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான செயற்குழு கண்டித்துள்ளது. அவரது இக்கருத்துகளையே, அதிகாரவயத் தலைவர்களைக் கொண்டுள்ள பிலிப்பைன்ஸ், துருக்கி ஆகிய நாடுகளும் பயன்படுத்துகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X