2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

காபூலில் இரட்டைத் தற்கொலைத் தாக்குதல்கள்; 25 பேர் பலி

Editorial   / 2018 மே 01 , மு.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சில நிமிட இடைவெளியில், நேற்று (30) காலை நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் என, ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சும் ஊடகங்களும் உறுதிசெய்துள்ளன.

இந்தத் தாக்குதலில், 49 பேர் காயமடைந்தனர் எனக் குறிப்பிட்ட, சுகாதார அமைச்சின் பேச்சாளர் வாஹிட் மஜ்ரோ, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாமெனவும் குறிப்பிட்டார்.

முதலாவது தாக்குதல், மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரியால், தன்னைத் தானே வெடிக்க வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நான்கு பேர் கொல்லப்பட்டதோடு, ஐந்து பேர் காயமடைந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அவ்விடத்தில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் சென்ற போது, ஊடகவியலாளர் போன்று அவ்விடத்துக்கு வந்த தாக்குதலாளி, தன்னைத் தானே வெடிக்க வைத்தார். இதன்போது, ஊடகவியலாளர்கள் பெரும்பான்மையாக உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில், பிரான்ஸ் செய்திச் சேவையான ஏ.எப்.பி-இன் காபூலுக்கான பிரதம படப்பிடிப்பாளரான ஷா மாராயும் கொல்லப்பட்டார் என, அச்செய்திச் சேவை தெரிவித்தது.

இத்தாக்குதலில் போது, 8 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்புத் தெரிவித்தது. ஷா மாராய்க்கு மேலதிகமாக, 1டி.வி என்ற ஊடகத்தைச் சேர்ந்த 2 ஊடகவியலாளர்கள், டொலோ செய்தி ஊடகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் உயிரிழந்தனர் என, இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை யார் மேற்கொண்டனர் என்பதற்கான உறுதியான தகவல், இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானில் பாரிய தாக்குதல்களை ஆரம்பிப்பதாக, தலிபான்கள் அறிவித்த சில நாட்களில், இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X