Editorial / 2018 மே 18 , மு.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் - காஸா எல்லையில், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறைகளின் போது, இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 62 பேரில் 50 பேர், ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, ஹமாஸ் குழுவின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (16) கருத்துத் தெரிவித்திருந்த சாலா பார்டாவெய்ல், இத்தகவலை வெளியிட்டிருந்தார். அவரது இக்கருத்து, இஸ்ரேலால் உடனடியாகவே இறுகப் பற்றிப் பிடிக்கப்பட்டதோடு, தமது நடவடிக்கையை நியாயப்படுத்தவும் பயன்பட்டது.
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரித்து, இஸ்ரேலுக்கான ஐ.அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றுவதற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் படையினரால், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இத்தாக்குதலுக்கு, சர்வதேச அளவிலான விமர்சனம் எழுந்திருந்த நிலையில், அதன்போது கொல்லப்பட்டவர்களில் அநேகமானோர், தமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என ஹமாஸ் கூறியிருப்பது, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், அது தொடர்பிலான மேலதிக தகவல்களை அவர் வழங்கியிருக்கவில்லை. எனவே, ஹமாஸ் குழுவின் ஆயுதப் பிரிவைச் சேர்ந்தவர்களா அல்லது தமது குழுவில் எப்பிரிவைச் சேர்ந்தவர்களா என்பதை அவர் கூறவில்லை.
இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால், கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, திங்கட்கிழமை கொல்லப்பட்டோரில் 24 பேரை, “பயங்கரவாதிகள்” என, தாம் இனங்கண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களுள் அநேகமானோர், ஹமாஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், வேறு இஸ்லாமியக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்கியிருந்தனர் என, இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
தற்போது, இவ்விடயத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ள நிலையில், திங்கட்கிழமை உயிரிழந்தோர் தொடர்பில், குழப்பமான நிலையே நிலவுகிறது.
37 minute ago
58 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
9 hours ago