2025 நவம்பர் 05, புதன்கிழமை

சிறைச்சாலை கலவரம்: 32 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 மே 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தஜிகிஸ்தானில் இடம்பெற்ற சிறைச்சாலை கலவரமொன்றில் மூன்று சிறைக் காவலர்களும், 29 சிறைக்கைதிகளும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை அந்நாட்டு அரசாங்கம் குற்றஞ்சாட்டுகின்றது.

தஜிகிஸ்தானின் தலைநகர் டுஷன்பேக்கு கிழக்காக 10 கிலோ மீற்றரிலுள்ள வக்டட் நகரத்திலுள்ள சிறைச்சாலையில், கத்தியைக் கொண்டிருந்த ஆயுததாரிகள் மூன்று சிறைக்காவலர்களையும், ஐந்து சக சிறைக்கைதிகளையும் கொன்ற நிலையிலேயே நேற்று முன்தினமிரவு கலவரம் வெடித்ததாக அந்நாட்டின் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சிறைச்சாலை வைத்தியசாலையை தீவைத்த ஆயுததாரிகள், சில சிறைச்சாலைக் கைதிகளை பணயக்கைதிகளாக எடுத்து வெளியேற முயன்றுள்ளனர்.

இந்நிலையில், 24 ஆயுததாரிகளை மோதலில் கொன்ற பாதுகாப்புப் படைகள் சிறைச்சாலையில் மீண்டும் ஒழுங்கைக் கொண்டு வந்ததாக தஜிகிஸ்தானின் நீதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சிறைச்சாலையில் 1,500 சிறைக்கைதிகள் இருந்துள்ளனர்.

அந்தவகையில், கொல்லப்பட்ட சிறைக்கைதிகளில், தஜிகிஸ்தானின் ஜனாதிபதி இமோமலி றக்மொன்னின் அரசாங்கத்தால் 2015ஆம் ஆண்டு சட்டரீதியற்ற கட்சியாக்கப்பட்ட தஜிகிஸ்தான் இஸ்லாமிய மறுமலர்ச்சிக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவர், அரசாங்கத்தை கவிழ்க்க விடுத்த அழைப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபலமான மதகுருவொருவரும் உள்ளடங்குகின்றார்.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுடன் இணைந்த தஜிகிஸ்தானின் சிறப்புப் படைகளின் கேணலொருவரான குல்முரோட் காலிமோவ்வின் மகனொருவரான பெக்ருஸ் குல்முரோட், கலகத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கொல்லப்பட்டவர்களுள் அவர் இருக்கின்றாரா என நீதியமைச்சு தெரிவித்திருக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X