2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

“ஜூலியனுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது”

Editorial   / 2024 மார்ச் 28 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்குமா என பிரிட்டிஷ் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப் உத்தரவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் ஜுலியன் அசாஞ்சே (52) கடந்த 2006-ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், ஈராக் போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க இராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.

இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலீஸார், ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவை உளவு பார்த்தது, இராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது அந்த நாட்டு அரசு சுமத்தி உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது.

இதுதொடர்பான வழக்கு லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப் விசாரித்து புதன்கிழமை (27) முக்கிய உத்தரவினைப் பிறப்பித்தார்.

“ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவரது கருத்து சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அமெரிக்க குடிமகனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உரிமைகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அசாஞ்சேவுக்கும் வழங்க வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். இவை குறித்து 3 வாரங்களுக்குள் அமெரிக்க அரசு பதில் அளிக்க வேண்டும்.

இல்லையென்றால் தொடர்ச்சியாக விசாரணை நடைபெறாது. அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கோரும் வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அசாஞ்சேவுக்கு அனுமதி வழங்கப்படும்" என்று நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப் உத்தரவிட்டார். இவ்வழக்கின் அடுத்த விசாரணை மே 20-க்கு ஒத்தி வைக்கப் பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .