Editorial / 2018 மே 17 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில், அடுத்த மாதம் நடைபெற ஏற்பாடாகியுள்ள, வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு, இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அணுவாயுதமழிப்புத் தொடர்பில், ஐ.அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தினால், இச்சந்திப்பில் கலந்துகொள்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என, வடகொரியா அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே, இச்சந்தேகம் எழுந்துள்ளது.
வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை, நேற்று (16) வெளியிட்ட அறிக்கை மூலமாகவே, இவ்விடயம் வெளியிடப்பட்டுள்ளது. வடகொரியாவில், சுயாதீனமான ஊடகங்கள் இல்லாத நிலையில், அரச செய்திச் சேவை மூலமாக வெளியிடப்படும் செய்திகள், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான அறிவிப்புகளாகவே கருதப்படுகின்றன.
வடகொரியாவின் வெளிநாட்டு அலுவல்களுக்கான முதலாவது உப அமைச்சர் கிம் கை குவானை மேற்கோள்காட்டிச் செய்தி வெளியிட்டுள்ள அவ்வூடகம், “லிபியப் பாணியில்”, வடகொரியாவிடமிருந்து அணுவாயுதமழிப்புத் தொடர்பில் ஐ.அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தினால், ஐ.அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் இடம்பெறவுள்ள சந்திப்பும் இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவும், சந்தேகத்துக்குரியனவாக மாறுமெனக் குறிப்பிட்டுள்ளது.
“கொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதமழிப்புத் தொடர்பில் எமது நோக்கத்தை, நாம் ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளோம். அத்தோடு, அணுவாயுதமழிப்புக்கான முன்நிபந்தனைகளாக, வடகொரியாவுக்கு எதிரான கொள்கைகளை நிறுத்துதல், அணுவாயுத அச்சுறுத்தல்களை நிறுத்துதல், ஐ.அமெரிக்காவிடமிருந்தான அச்சுறுத்தல்களை நிறுத்துதல் என்பவற்றை, ஏற்கெனவே பல தடவைகள் குறிப்பிட்டுள்ளோம்” என, உப அமைச்சர் குறிப்பிட்டார்.
அணுவாயுதத் திட்டங்களை, லிபியா கொண்டிருந்தது என்று கருதப்பட்டாலும், 2003ஆம் ஆண்டு முதல், அவற்றை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டது. லிபியா மீதான, ஐ.அமெரிக்காவின் தடைகளை நீக்குவதற்காகவே, இச்செயற்பாட்டில், அப்போதைய தலைவர் முஹம்மர் கடாபி ஈடுபட்டார். எனினும், 2011ஆம் ஆண்டு, ஐ.அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகளால் லிபியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, அணுவாயுதத்தை லிபியா கைவிட்டமையே, இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படக் காரணமென, சில தரப்பினரால் குறிப்பிடப்பட்டது. அதையே, வடகொரியா சுட்டிக்காட்டியுள்ளது.
வடகொரியாவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு, அண்மைக்காலத்தில் முன்னேற்றமடைந்து, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும், எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி, சிங்கப்பூரில் வைத்துச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், வடகொரியாவால் விடுக்கப்பட்டுள்ள இவ்வறிவிப்பு, அச்சந்திப்பு இடம்பெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு அச்சந்திப்பு இரத்துச் செய்யப்படுமாயின், ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு, உள்நாட்டில் விமர்சனங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. வடகொரியத் தலைவருடன், ஐ.அமெரிக்க ஜனாதிபதி, தற்போதைய நிலையில் சந்திக்கக்கூடாது என்ற கருத்துகள், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன. அவற்றுக்கு மத்தியிலேயே, இச்சந்திப்பை நடத்துவதற்கு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இச்சந்திப்புக்குச் சம்மதம் தெரிவித்திருந்தார்.
36 minute ago
57 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
9 hours ago