Editorial / 2018 டிசெம்பர் 14 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞராக இருந்த மைக்கல் கொஹெனுக்கு, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது வேட்பாளராக இருந்த ட்ரம்ப்பைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட சட்டவிரோதமான செயற்பாடுகள் உள்ளிட்ட குற்றங்களுக்காகவே, அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று (13) அதிகாலை விதிக்கப்பட்ட இத்தண்டனை அறிவிப்பு, ஜனாதிபதி ட்ரம்ப் மீதான அழுத்தத்தை அதிகரிக்குமெனக் கருதப்படுகிறது.
சில காலங்களுக்கு முன்னர், “ட்ரம்ப்புக்காகத் துப்பாக்கிச் சன்னங்களையும் ஏந்துவேன்” எனத் தெரிவித்த கொஹென், ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞராக மாத்திரமன்றி, அவரது பிரச்சினைகளையும் தீர்ப்பவராக இருந்தார். இருவருக்குமிடையிலான உறவு, மிக நெருக்கமாகக் காணப்பட்டது.
ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பான விசாரணைகளில், கொஹென் தொடர்பாகவும் ஆராயப்பட்டதோடு, ரஷ்யாவின் தலையீடு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லரால் வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து, கொஹெனின் வீடு, அலுவலகம் ஆகியன சோதனையிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, விசாரணையாளர்களுடன் ஒத்துழைப்பதற்கு, கொஹென் முயன்றார்.
இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக, பாலியல் திரைப்பட நடிகையொருவருக்குப் பணம் கொடுத்த விடயத்தை, கொஹென் வெளிப்படுத்தினார். ஸ்டோர்மி டானியல்ஸ் என்ற அந்த நடிகைக்கும் தனிநபராக ட்ரம்ப் இருந்த போது அவருக்கும் இடையில் காணப்பட்டதாகக் கூறப்படும் உறவை மறைப்பதற்காகவே, இப்பணம் வழங்கப்பட்டது. ஸ்டோர்மி டானியல்ஸின் கருத்துகள் வெளிவந்தால், ஜனாதிபதித் தேர்தலில், ட்ரம்ப்புக்குப் பாதிப்பாக அமையுமென்பதற்காகவே இப்பணம் வழங்கப்பட்டது.
பணம் வழங்கப்பட்ட விடயத்தை, ஜனாதிபதி ட்ரம்ப்பின் தரப்பினர் தொடர்ச்சியாக மறுத்து வந்தாலும், கொஹென் அதை உறுதிப்படுத்தியதோடு, அப்போது வேட்பாளராக இருந்த ட்ரம்ப்பின் பணிப்புரையின் பேரிலேயே, அப்பணத்தை வழங்கியதாகக் குறிப்பிட்டார்.
டானியல்ஸுக்கான பணத்தை வழங்கியமை, ஐ.அமெரிக்க பிரசார நிதியியல் சட்டங்களுக்கு எதிரானது என்ற அடிப்படையில், ட்ரம்ப்பின் பணிப்புரையில் அதை வழங்கியதாக கொஹென் வெளிப்படுத்தியமை, ஜனாதிபதி ட்ரம்ப்பையும், சிக்கலுக்குள் தள்ளியிருந்தது.
இக்குற்றம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காகவே, கொஹெனுக்கு, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. விசாரணையாளர்களோடு ஒத்துழைத்ததன் காரணமாகவே, அவரது தண்டனை குறைவடைந்திருந்தது. தனக்கான தீர்ப்பு வழங்கும் போது, நீதிமன்றத்தில் வைத்துக் கருத்துத் தெரிவித்த கொஹென், தனது நடவடிக்கைகளுக்காக மன்னிப்புக் கோரினார்.
3 minute ago
6 minute ago
13 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
13 minute ago
28 minute ago