2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

நஜீப்புக்குப் புதிய சிக்கல் வருகிறதா?

Editorial   / 2018 மே 21 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவில் தோற்கடிக்கப்பட்ட பிரதமரான நஜீப் ரஸாக், ஏற்கெனவே எதிர்கொண்டுவரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, கொலை தொடர்பான குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியேற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மொங்கொலியாவைச் சேர்ந்த மொடல் நடிகையொருவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையை, மீள நடத்துமாறு, மொங்கோலிய ஜனாதிபதி கோரியுள்ளமையைத் தொடர்ந்தே, இவ்வெதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்போது பிரதிப் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் நஜீப் இருந்த போது, அவரின் உறவினரும் அவரின் நெருங்கிய அரசியல் ஆலோசகராகவும் இருந்த அப்துல் ரஸாக் பகின்டா என்பவரின் காதலியே கொல்லப்பட்டிருந்தார்.

இக்கொலை தொடர்பாக, நஜீப்பின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 2 பொலிஸாருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களுள் ஒருவர், பூரண பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், புதிய விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணைக் கொல்லுமாறு யார் உத்தரவிட்டார்கள் என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிரான்ஸ் நிறுவனமொன்றிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் போது, அப்துல் ரஸாக்கின் மொழிபெயர்ப்பாளராகவும் ஆலோசகராகவும் செயற்பட்டமை காரணமாகவே, அப்பெண் கொல்லப்பட்டார் என, சிவில் சமூகக் குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், ஊழல் காரணங்களுக்காக யாரும் கொல்லப்படவில்லை என, நஜீப்பின் தரப்புத் தெரிவிக்கிறது.

இவற்றின் பின்னணியிலேயே, மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏற்கெனவே, மலேஷிய அபிவிருத்தி நிதியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும், பல பில்லியன் டொலர்கள் தொடர்பான மோசடி காரணமாகச் சிக்கலை எதிர்கொண்டுள்ள நஜீப், இவ்விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டால், கடுமையாகப் பாதிக்கப்படுவார் எனக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X