2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா

Editorial   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் நேற்று தலைநகர் காத்மாண்டுவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஷர்மா ஒலி அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து நேபாள காங்கிரஸ் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. நேபாள காங்கிரஸ் தலைவரான வேளாண் அமைச்சர் ராம் நாத் அதிகாரி, பிரதமர் கே.பி. ஒலி தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று அரசாங்கம் போராட்டங்களைக் கையாண்டதற்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார்.

காத்மாண்டுவுக்கு அப்பாலும் போராட்டங்கள் விரிவடைந்ததால், பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். லால்பாண்டி நகராட்சி அலுவலகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், பல இடங்களில் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர்.

இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ள பிரதமர் ஷர்மா ஒலி, பிரச்சினைக்குத் தீர்வு காணவும், அரசியல் ரீதியாக தீர்வுகள் முன்னெடுக்கப்படுவதற்கு உதவவும் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார்.

போராட்டங்கள் ஏற்படுத்திய விளைவு: கடந்த ஆண்டு செப்​டம்​பரில் நேபாள உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை தொடர்ந்​து, சமூகவலைதள நிறு​வனங்​கள் பதிவு செய்​ய​வும், குறைதீர்ப்பு அதி​காரியை நியமிக்​க​வும் ஏழு நாட்​கள் அவகாசம் வழங்க நேபாள அமைச்​சரவை கடந்த மாதம் முடிவு செய்​தது. இந்த நிலை​யில், பதிவு செய்​து​கொள்​ளாத பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட26 சமூக வலை​தளங்​களை கடந்த வெள்​ளிக்​கிழமை முடக்கி நேபாள அரசு நடவடிக்கை மேற்​கொண்​டது. ஆன்​லைன் மோசடி மற்​றும் பண மோசடி ஆகிய​வற்றை சுட்​டிக்​காட்டி இதேபோன்​று, கடந்த ஜூலை​யில் டெலிகி​ராம் மெசேஜ் செயலியை நேபாள அரசு தடை செய்​தது.

இந்த நிலையில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் இளைஞர்கள் அதிக அளவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு வாபஸ் பெற்றது. எனினும், ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இதன் காரணமாக, நேபாள காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொள்ள பரீசீலித்த நிலையில் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X