2025 ஜூலை 31, வியாழக்கிழமை

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் கம்போடியா

Freelancer   / 2025 ஜூலை 30 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தாய்லாந்து இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டன.

எல்லை தொடர்பான சிக்கல்களால், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த போரில் நேற்று முன்தினம் வரை இருதரப்பிலும் சேர்த்து 38 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 3,00,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்த்தனர்.

இந்த நிலையில், தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் நேற்று முன்தினம் மலேசியாவின் புத்ரஜெயாவில் உள்ள பிரதமர் அன்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். நேற்று முன்தினம்  நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என்று இரு நாடுகளும் அறிவித்தன.

இந்த நிலையில், கம்போடியா போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக தாய்லாந்து இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய தாய்லாந்து இராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி,

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நேரத்தில், கம்போடிய படைகள் தாய்லாந்து எல்லைக்குள் பல பகுதிகளில் ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்தியதை தாய்லாந்து தரப்பு கண்டறிந்தது. இது ஒப்பந்தத்தை வேண்டுமென்றே மீறுவதாகவும், பரஸ்பர நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தெளிவான முயற்சியாகவும் அமைகிறது. எனவே, கம்போடியாவின் மீறல்களுக்கு தாய்லாந்து சரியான முறையில் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்

ஆனாலும், நள்ளிரவு 12 மணிக்கு போர் நிறுத்தம் ஏற்பட்டதிலிருந்து எங்கள் படைகள் தாக்குதல்களை நிறுத்தின என்று கம்போடிய பிரதமர் ஹன் மானெட் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .