2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘பிரெக்சிற் திட்டத்தை ஆதரிக்காவிட்டால் நாட்டுக்குப் பேரழிவு’

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பாக, தன்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்டத்தை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாட்டுக்கான பேரழிவாக அது அமையுமென, பிரதமர் தெரேசா மே எச்சரித்துள்ளார். குறித்த வாக்கெடுப்பில் அவர் தோற்பாரென எதிர்பார்க்கப்படும் நிலையில், இறுதிநேரக் கோரிக்கையாக இது அமைந்துள்ளது.

பிரெக்சிற் தொடர்பான பிரதமர் மே-இன் திட்டம் தொடர்பில், ஐ.இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாளை (15) வாக்களிக்கவுள்ளனர். இவ்வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைவார் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு, டிசெம்பரில் நடைபெறவிருந்த போதிலும், அதில் அவர் தோல்வியடைவது ஓரளவுக்கு உறுதியானதைத் தொடர்ந்து, அந்நிலையை ஏற்றுக்கொண்ட அவர், வாக்கெடுப்பைப் பிற்போட்டிருந்தார். தற்போதும் அவரது தோல்வி ஓரளவுக்குத் தெளிவாகக் காணப்படும் நிலையில், இறுதிநேரக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

தனது திட்டத்தை நிராகரிப்பது, நாட்டுக்குப் பேரழிவாக அமைவதோடு, நாட்டின் ஜனநாயகம் தொடர்பில் காணப்படும் நம்பிக்கையை இல்லாது செய்யுமெனவும் அவர் தெரிவித்தார்.

“எனவே இந்த வாரயிறுதியில், நாடாளுமன்றத்துக்கான எனது கோரிக்கை இலகுவானது: விளையாட்டுகளை மறந்து, எமது நாட்டுக்குச் சரியானதைச் செய்யுங்கள்” என, அவர் குறிப்பிட்டார்.

உலகின் 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமான ஐ.இராச்சியம், இவ்வாண்டு மார்ச் 29ஆம் திகதியுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டியுள்ளது. அதற்குள், விலகுவது குறித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டிய நிலையில், பாரிய அழுத்தத்தை அந்நாடு எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X