2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

புதன்கிழமையன்று பதவியேற்கிறார் குமாரசுவாமி

Editorial   / 2018 மே 21 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பையேற்பதற்கு, ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியின் சட்டசபை உறுப்பினர்களின் தலைவர் எச்.டி. குமாரசுவாமிக்கு, அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, நாளை மறுதினம் புதன்கிழமை (23), இப்பதவியேற்பு இடம்பெறவுள்ளது.

கர்நாடகாவில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலில், எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யார் ஆட்சியமைப்பது என்ற குழப்பம் நிலவியது.

எனினும், 224 ஆசனங்களைக் கொண்ட இச்சபையில், 222 ஆசனங்களுக்கான தேர்தல் இடம்பெற்ற நிலையில், 104 ஆசனங்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாகக் காணப்பட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு, ஆட்சியமைப்பதற்கான அழைப்பை, ஆளுநர் விடுத்திருந்தார்.

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு, 15 நாட்கள் வழங்கப்பட்டிருந்தாலும், உச்சநீதிமன்றம் தலையிட்டு, கடந்த சனிக்கிழமையே, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டது.

எனினும், 4 மணிக்கு இடம்பெற வேண்டிய நம்பிக்கை வாக்கெடுப்பு முன்னதாக உரையாற்றிய முதலமைச்சர் எடியூரப்பா, பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், ஜனதா தளம் இணைந்த கூட்டணிக்கு, ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதில், ஜனதா தளத்தின் குமாரசுவாமியே, முதலமைச்சர் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பதவியேற்குமாறும், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இன்று (21) பதவியேற்பதற்கான வாய்ப்புகள் ஆரம்பத்தில் காணப்பட்டிருந்தாலும், இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜிவ் காந்தியின் நினைவு தினம் இன்றென்பதால், புதன்கிழமைக்கு, பதவியேற்புப் பிற்போடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X