2025 மே 01, வியாழக்கிழமை

மன்னிப்புக் கோரினார் மார்க் ஸக்கர்பேர்க்

Editorial   / 2018 ஏப்ரல் 12 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவுநரும் அதன் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஸக்கர்பேர்க், ஐக்கிய அமெரிக்க செனட்டின் வர்த்தக, நீதிச் செயற்குழுக்களின் இணைந்த அமர்வின் முன்பாக, இலங்கை நேரப்படி நேற்று (11) அதிகாலை கலந்துகொண்டு, செனட்டர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கேம்பிரிஜ் அனலிட்டிக்கா நிறுவனம், இன்னொரு நிறுவனத்திடமிருந்து 87 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தரவுகளைச் சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்து, ஐ.அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியுள்ளது என்பது, அண்மையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், செனட்டர்களின் கருத்துகளுக்குப் பதிலளித்த ஸக்கர்பேர்க், தாங்கள் உருவாக்கிய கருவிகள், தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, போதிய பணிகளை ஆற்றியிருக்கவில்லை எனத் தெரிவித்ததோடு, “எங்களது பொறுப்புத் தொடர்பாக, பரந்தளவிலான பார்வையை நாங்கள் எடுத்திருக்கவில்லை. அது, மிகப்பெரிய தவறு. அது, என்னுடைய தவறு. அதற்கு வருந்துகிறேன். பேஸ்புக்கை நான் ஆரம்பித்தேன், நான் நடத்துகிறேன், அங்கு நடப்பவற்றுக்கு, நானே பொறுப்பு” என்று குறிப்பிட்டார்.

கேம்பிரிஜ் அனலிட்டிக்கா நிறுவனம், மோசடியான முறையில் தரவுகளைப் பெற்றது என்பது, 2015ஆம் ஆண்டிலேயே தெரிந்திருந்தது என்ற போதிலும், அது தொடர்பில் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமை ஏன், 87 மில்லியன் பயனர்களுக்கும் அது தொடர்பில் அறிவிக்கப்படாமை ஏன் போன்ற கேள்விகளுக்கு, நேரடியான, தெளிவான பதில்களை, ஸக்கர்பேர்க் வழங்கியிருக்கவில்லை.

அதேபோல், விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவதற்காக, எந்தளவுக்குப் பயனர்களின் தரவுகளைச் சேகரிக்கிறது என்ற விடயம் தொடர்பான சில கேள்விகளுக்கும், நேரடியான பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை.

அத்தோடு, அநேகமான செனட்டர்கள், தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளும் அளவு குறித்துச் சந்தேகங்கள் காணப்பட்ட நிலையில், ஸக்கர்பேர்க்கின் பதில்களுக்கான பதில் கேள்விகளை எழுப்புவதிலும், அவர்கள் தடுமாறினர். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டரான கமலா ஹரிஸ் மாத்திரம், ஸக்கர்பேர்க்கிடம் கடினமான கேள்விகளைக் கேட்டிருந்தார். அவற்றுக்கான தெளிவான பதில்களை, ஸக்கர்பேர்க் வழங்கியிருந்தனர்.

ஆனால், சரியான கட்டுப்பாடுகள் காணப்படுமாயின், அவற்றுக்கு உட்படுவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ஸக்கர்பேர்க், அதுகுறித்து, செனட்டர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இதன்போது உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .