2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

முன்னாள் படைவீரருக்கு 5,160 ஆண்டுகள் சிறை

Editorial   / 2018 நவம்பர் 23 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவாட்டமாலாவைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் ஒருவருக்கு, 5,160 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றமொன்று, நேற்று முன்தினம் (21) உத்தரவிட்டது. நாட்டின் சிவில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், 201 பேரைக் கொன்ற குற்றத்துக்காகவே, இத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த கொலைகளில், 171 கொலைகளை நடத்தியவர் என்ற பொறுப்பு, சான்டோஸ் லோபஸ் என்ற குறித்த படைவீரருக்கு உண்டு என முடிவுசெய்த நீதிமன்றம், ஒவ்வொரு கொலைக்கும் தலா 30 ஆண்டுகள் என, 5,130 ஆண்டுகளைச் சிறைத்தண்டனையாக விதித்தது. இவற்றுக்கு மேலதிகமாக, தப்பிப் பிழைத்த குழந்தையொன்றைக் கொன்றமைக்காக, மேலதிகமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தண்டனைகள், குறியீட்டுக்குரியனவாகவே அமைகின்றன. ஏனெனில், குவாட்டமாலாவில் அதிகபட்ச சிறைத்தண்டனை, 50 ஆண்டுகள் ஆகும்.

தண்டனை விதிக்கப்பட்ட லோபஸ், ஐக்கிய அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட, கைபில் என்ற விசேட இராணுவப் பிரிவின் உறுப்பினராவார். ஐ.அமெரிக்காவில் வைத்து, 2016ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட இவர், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டிருந்தார்.

குவாட்டமாலாவை, 1982 முதல் 1983ஆம் ஆண்டு வரை ஆட்சிசெய்த சர்வாதிகாரி எப்ரைன் றியோஸ் மொன்ட் என்பவரின் காலத்திலேயே, இந்தக் கொலைகள் இடம்பெற்றிருந்தன. தனது ஆட்சிக்காலத்தில் இவர், 1,771 பேரைக் கொல்ல உத்தரவிட்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இனவழிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட றியோஸ் மொன்ட், சிறையிலடைக்கப்பட்டு, இவ்வாண்டு ஏப்ரலில் காலமாகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X