Editorial / 2026 மே 06 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ருமேனியாவின் ஐரோப்பிய ஆதரவு அரசாங்கம், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்து வீழ்ந்துள்ளது. ஆளும் கூட்டணி பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னரே ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, அந்நாட்டில் மீண்டும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அங்கு தீவிர வலதுசாரி கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வரும் சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பிற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய லிபரல் கட்சிப் பிரதமர் இலி போலோஜன் (Ilie Bolojan), "இந்தக் கண்டனத் தீர்மானம் பொய்யானது, வஞ்சகமானது மற்றும் செயற்கையானது. பல நெருக்கடிகளில் சிக்கியுள்ள எந்தவொரு நாடும் அரசாங்கங்களை மாற்ற முயலாது, மாறாக அவற்றை வலுப்படுத்தவே முயலும்" என்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில்மிகப்பெரிய கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி (PSD) மற்றும் தீவிர வலதுசாரி கட்சியான 'ருமேனியர்களின் ஒன்றியத்திற்கான கூட்டணி' (AUR) ஆகியவை இணைந்து கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு, 464 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 281 வாக்குகள் கிடைத்தன. போலோஜனின் பி.என்.எல் (PNL) கட்சி மற்றும் அதன் கூட்டாளியான யூ.எஸ்.ஆர் (USR) ஆகியவை இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஏ.யு.ஆர் (AUR) கட்சியின் தலைவர் ஜார்ஜ் சிமியன் (George Simion), "மக்களின் குரல்" கேட்கப்பட்டுவிட்டதாகக் கூறி, முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு அழைப்பு விடுத்தார். நாட்டின் எதிர்காலத்திற்குத் தனது கட்சி பொறுப்பேற்பதாகவும், ருமேனியாவின் தலைவிதி மக்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ருமேனியாவில் 2028-ஆம் ஆண்டு வரை பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஏ.யு.ஆர் (AUR) கட்சி 37 சதவீத ஆதரவுடன் மிகவும் பிரபலமான கட்சியாக உருவெடுத்துள்ளதால், தற்போதைய சூழலில் உடனடித் தேர்தலை நடத்த மற்ற கட்சிகள் விரும்பாது எனக் கருதப்படுகிறது.
புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள மத்தியவாத அதிபர் நிக்குஷோர் டான் (Nicușor Dan), முன்கூட்டியே தேர்தல் நடத்தும் வாய்ப்பை நிராகரித்துள்ளார். அதற்குப் பதிலாக, நான்கு கட்சிக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்ப அல்லது ஒரு தொழில்நுட்ப வல்லுநரின் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க அவர் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவிர வலதுசாரிகள் ஆட்சியில் இணைவதை நிராகரித்துள்ள அவர், "நியாயமான காலப்பகுதிக்குள்" புதிய மேற்குலக ஆதரவு அரசாங்கம் அமையும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, போலோஜன் தலைமையிலான சிறுபான்மை அரசாங்கத்திலிருந்து சமூக ஜனநாயகக் கட்சி (PSD) கடந்த மாதம் விலகியதைத் தொடர்ந்தே இந்த அரசியல் நெருக்கடி ஆரம்பமானது. தற்போது அக்கூட்டணி மீண்டும் இணைவது அல்லது புதிய கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
20 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
39 minute ago
2 hours ago