2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

விவேக் ராமசாமி ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகினார்

Mayu   / 2024 ஜனவரி 17 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதிதேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவில் அயோவா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக உள்ளார். 2024 ஆண்டு இறுதியில் அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக வேட்பாளரை இறுதி செய்யும் உட்கட்சி தேர்தலை அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் குடியரசுக் கட்சி நடத்தி வருகிறது.

இதற்கமைய, அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் டிரம்புக்கு 51.1% வாக்குகள் கிடைத்தன.

புளோரிடா மாகாண ஆளுநர் ரான் டேசாண்டிஸ் 20.7% வாக்குகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறார். 

நிக்கி ஹேலிக்கு 19% வாக்குகளும், விவேக் ராமசாமிக்கு 7. 7 % வாக்குகளும் கிடைத்தன.

இந்தப் பின்னடைவினைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். மேலும், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான விவேக் ராமசாமி தற்போது தொழில்முனைவாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அயோவா மாகாண தேர்தல் வெற்றியை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் என்று விமர்சித்தார்.

தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இஸ்ரேல் மீது ஹமாஸ் போர் தொடுத்திருக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும்,  தான் மீண்டும் அதிபரானால், இஸ்ரேல், ரஷ்யா பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என்றும் டிரம்ப் உறுதிபடத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X