2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டதன் பின்னணி என்ன?

Editorial   / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போர், ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கான காலக்கெடு முடிவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாகப் பேசிய டிரம்ப், "ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும்; இல்லையெனில் ஈரானின் நாகரிகமே அழிக்கப்படும், அதிலிருந்து அவர்களால் மீண்டு வர முடியாது" என்று மிரட்டல் விடுத்திருந்தார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட்டு ஈரான் மற்றும் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போர் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்தது. கப்பல் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியதால், சர்வதேச சந்தையில் நிலவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஜலசந்தியைக் கடக்க அனுமதி இல்லை என்றும், அனைத்துக் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரானின் அரசுச் செய்தி நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி. (IRIB) வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

"ஈரானின் பார்ஸ் மாகாணத்திலுள்ள லார் நகரின் வான்பரப்பில் இஸ்ரேலுக்குச் சொந்தமான 'ஹெர்ம்ஸ் 900' ரக ட்ரோன் அத்துமீறிப் பறந்தது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் நவீன வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் விமானங்கள் அல்லது ட்ரோன்கள் ஈரானிய வான் எல்லைக்குள் நுழைவது போர் நிறுத்த மீறலாகக் கருதப்படும். இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இஸ்ரேலின் இந்த விதிமீறல் காரணமாகவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன."

இதற்கிடையே, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய 100-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், லெபனான் பகுதி போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.

இருப்பினும், இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டை மறுத்துள்ள ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற இதர ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உட்பட அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .