Editorial / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர பெயரிட்டுள்ளமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு நாடகம் என அவர் சாடியுள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இன்று (07) விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
இனவாத அரசியல் மீளவும் அரங்கேறுகிறது:
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, முஜிபுர் ரஹ்மான் மாத்திரமன்றி ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளாகச் சித்திரிக்க முயல்கின்றார். கடந்த காலங்களில் 'மலட்டுக் கொத்து', 'மலட்டுச் சத்திரசிகிச்சை' எனப் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து டாக்டர் ஷாபி உள்ளிட்டவர்களுக்கு இழைத்த துயரங்களையும் அவமானங்களையும் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. இத்தகைய இனவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களே இன்று தமது அரசியல் தேவைகளுக்காக முஜிபுர் ரஹ்மானைப் பிரதான சூத்திரதாரியாகச் சித்தரிக்கின்றனர்.
அன்று நடவடிக்கை எடுக்காதது ஏன்?
2020ஆம் ஆண்டு மக்கள் ஆணையைப் பெற்று, பொலிஸ் அமைச்சராகச் செயற்பட்ட சரத் வீரசேகரவிடம் ஒரு கேள்வியை முன்வைக்கின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கைது செய்வோம் எனக் கூறி ஆட்சியைப் பிடித்த நீங்கள், அமைச்சராக இருந்தபோது முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக எடுத்த சட்ட நடவடிக்கை என்ன? தற்போது அவருக்கு 'ஐஎஸ்' (IS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகக் கூறும் நீங்கள், அது குறித்த சாட்சியங்கள் ஆணைக்குழு அறிக்கையில் இருந்தால், ஏன் அன்று நடவடிக்கை எடுக்கவில்லை? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட புத்தகம் குறித்த விமர்சனத்தால் எற்பட்ட காழ்ப்புணர்ச்சியே இந்தத் தரம் தாழ்ந்த குற்றச்சாட்டுக்குக் காரணமாகும்.
இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்:
முஜிபுர் ரஹ்மான் நாட்டின் நலனுக்காகப் பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவக் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு மக்கள் தலைவர். அவரை இலக்கு வைத்து மீண்டும் இனப்பிரிவினையை உருவாக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய அடிப்படைவாதம் நாட்டிற்குப் பொருத்தமற்றது. ஒரு பௌத்தராக, புத்த பெருமான் போதித்த தர்மத்திற்கு அமைய, இனங்களுக்கு இடையே வேற்றுமையை ஏற்படுத்தாமல் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவது என்பது அரசியல் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான ஒன்றாக இருக்கக் கூடாது. உண்மையை வெளிப்படுத்துவதன் மூலமே அவர்களுக்கு நீதி வழங்க முடியும். எனவே, இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டை அழிக்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனச் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago