2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இனிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களால் சென்.ஜோன்ஸ் அணி வெற்றி

Super User   / 2014 மார்ச் 02 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தினால் பாடசாலைகளின் 19 வயது பிரிவு – 2 அணிகளுக்கிடையில் நடத்தப்பட்டு வரும் 2 நாட்கள் துடுப்பாட்டப் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

மேற்படி சுற்றுப்போட்டி நேற்று முன்தினம் (28) யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் இடையில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதற்கிணங்கக் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் அணி 67.2 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் எஸ்.ஜெனிபிளமிங் 49, எம்.நிலோஜன் 43, பி.துவாரகசீலன் 36, ஏ.கானாமிர்தன் ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சார்பாக ஏ.ஜெரிக்ஸன் 3 (37), எஸ்.கபிலன் 2 (40), எவ்.பிராங்கிளின்டன் 2 (37) இலக்குகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அடுத்தடுத்து இலக்குகளைப் இழந்து, 38.2 பந்துபரிமாற்றங்களில் 84 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது, தொடர்ந்து மீண்டும் பலோ ஒன் நிலைக்குத் தள்ளப்பட்டது. துடுப்பாட்டத்தில் ஏ.சுபநேசன் 18 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக எம்.நிலோஜன் 5 (27) லோகதீஸ்வரன் 3 (21) இலக்குகளை கைப்பற்றினர்;.
இரண்டு நாட்கள் துடுப்பாட்டப் போட்டியின் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணி, முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணி பெற்றுக் கொண்ட  ஓட்டங்களைவிட 100 அல்லது அதற்கு கூடுதலான ஓட்டங்கள் குறைவாகக் பெற்றால் அவ்வணி மீண்டும் இரண்டாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாட வேண்டும் என்ற இலங்கைத் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் நியதிக்கமைய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி மீண்டும் துடுப்பெடுத்தாடியது.

இரண்டாவது இனிங்ஸிலும் துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதையடுத்து, சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 36.4 பந்துபரிமாற்றங்களில் 120 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்து, இனிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் எவ்.பிராங்கிளின்டன் 26 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக எம்.நிலோஜன் 4 (25), ஏ.கானாமிர்தன் 3 (22) இலக்குகளை கைப்பற்றினர். (படங்கள் சொர்ணகுமார் சொரூபன்)





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X