Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்த அணியான த்றீ ஸ்டார்ஸ் கால்பந்தாட்டக் கழகத்தின் 70ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற, அணிக்கு ஏழு பேர்களைக் கொண்ட கால்பந்தாட்டத் தொடரில், கானா மற்றும் நைஜீரியா நாடுகளின் வீரர்களை உள்ளடக்கிய புத்தளம் சில்வர் ஸ்பூன் அணி வெற்றி பெற்றுச் சம்பியனாகியுள்ளது. இரண்டாமிடத்தினை, புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணியும், மூன்றாமிடத்தினை புத்தளம் விம்பிள்டன் அணியும் பெற்றுக் கொண்டுள்ளன.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் மேற்பார்வையில் நடைபெற்ற 20 நிமிடங்களை, கொண்ட விலகல் அடிப்படையிலான இந்த போட்டித் தொடரானது, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில், அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டித் தொடருக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி பூரண அனுசரணை வழங்கி இருந்தார். இத்தொடரினை, புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும் புத்தளம் த்றீ ஸ்டார்ஸ் அணியின் தலைவருமான எம்.எஸ்.எம்.ரபீக்கின் தலைமையில் த்றீ ஸ்டார்ஸ் அணியின் அனைத்து அங்கத்தவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தப் போட்டித் தொடரில், மொத்தமாக 24 அணிகள் போட்டியிட்டன. திறந்த போட்டியாக இந்தப் போட்டித் தொடர் அறிவிக்கப்பட்டிருந்தது. முதலாவது அரையிறுதிப் போட்டியில், விம்பிள்டன் அணியும் நியூ ஸ்டார்ஸ் அணியும் மோதிக்கொண்டதில், பெனால்டி மூலம் நியூ ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான தகுதியைப் பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், புத்தளம் சில்வர் ஸ்பூன் அணியும் புத்தளம் ஜுவனைல் அணியும் மோதிக்கொண்டதில் சில்வர் ஸ்பூன் அணி ஐந்து கோல்களினால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கான தகுதியைப் பெற்றது.
மூன்றாம் இடத்தினை தெரிவு செய்வதற்காக, அரையிறுதி போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் விம்பிள்டன் அணி வெற்றி பெற்று, மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
பரபரப்பான இறுதிப் போட்டியில், நியூ ஸ்டார்ஸ் அணியோடு சில்வர் ஸ்பூன் அணி மோதியது. இந்த சில்வர் ஸ்பூன் அணியானது, புத்தளம் நகரின் பிரபல கால்பந்தாட்ட கழகம் ஒன்றின் முன்னாள் கோல் காப்பாளர் ஏ.எச்.எம். அன்வர்தீனினால் வழி நடாத்தப்பட்டிருந்தது. இந்த அணியில் கானா நாட்டினைச் சேர்ந்த இருவரும் நைஜீரியா நாட்டினைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்கப்பட்டிருந்தனர். மாவனல்லை செரெண்டிப் அணி வீரர்களான இவர்களை அவ்வணியின் முக்கியஸ்தர் எம்.லரீப் புத்தளம் அழைத்து வந்திருந்தார்.
இறுதிப் போட்டியில், சில்வர் ஸ்பூன் அணியானது நான்கு கோல்களினால் வெற்றி பெற்றுச் சம்பியனாகத் தெரிவானது. கானா நாட்டின் வீரர்களான, முஹம்மது அப்துல்லாஹ் ஒரு கோலினையும் சிமோன் இரண்டு கோல்களையும் நைஜீரியா நாட்டின் வீரர் சோலா ஒரு கோலினையும் பெற்றுக்கொடுத்தனர்.
சகல போட்டிகளுக்கும் நடுவர்களாக, ஏ.எச்.உமர் பாச்சா, ஏ.ஓ.அசாம், எம்.எச்.எம். ரினூஸ், என்.எம். நிஸ்ரின், ஏ.எம். சபீக் ஆகியோர் கடமையாற்றினர். சம்பியன் அணிக்கு, வெற்றிக்கிண்ணத்துடன் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் இரண்டாமிடம் பெற்ற அணிக்கு, வெற்றிக்கிண்ணத்துடன் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் மூன்றாமிடம் பெற்ற அணிக்கு, ரொக்கப்பணமாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டன.
இதே தினத்தன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற பெனால்டி உதை போட்டித் தொடரில், முதலாமிடத்தினை, புத்தளம் 19 வயதுக்குட்பட்ட சஹீரியன்ஸ் அணியும் இரண்டாமிடத்தினை, புத்தளம் 17 வயதுக்குட்பட்ட சஹீரியன்ஸ் அணியும் பெற்றுக்கொண்டன. இதில், முதலாமிடம் பெற்ற அணிக்கு 7,500 ரூபாய் ரொக்கப்பணமும் இரண்டாம்மிடம் பெற்ற அணிக்கு 2,500 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கிவைக்கப்பட்டன.
அணிக்கு ஏழு பேர்களைக் கொண்ட போட்டித் தொடரில், திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி தோல்வியைத் தளுவிய அணியான, புத்தளம் சாஹிராவின் 15 வயதுக்குட்பட்ட அணியினருக்கு இதன் போது சிறிய கிண்ணங்களும் பந்துகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025